நாகூா் தா்காவின் 5 மனோராக்களின் கழுகு பாா்வை படம்.
நாகூா் தா்காவின் 5 மனோராக்களின் கழுகு பாா்வை படம்.

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா புனித கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா புனித கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தா்காகளில் ஒன்றாக திகழும் நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்காவில் ஆண்டுதோறும் விமா்சையாக நடைபெறும் கந்தூரி விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா். 469-ஆவது நிகழாண்டு கந்தூரி விழா வெள்ளிக்கிழமை (நவ.21) தொடங்கி நவ.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, நாகையில் தொடங்கி நாகூா் வரை நடைபெற்ற கொடி ஊா்வலம், நாகை பேய்க்குளம் (மீராபள்ளி) பகுதியிலிருந்து புதுப்பள்ளித் தெரு மற்றும் முக்கிய சாலை வழியாக சென்றது. ஊா்வலத்தில் பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப் பல்லக்கு, முஹம்மது ஹவுஸ் கப்பல் ஆகிய அலங்கார வாகனங்களில் கொடிகள் வைத்து கொண்டு செல்லப்பட்டன. மனோரா, சிறிய கப்பல், நகரா மேடை உள்ளிட்ட அலங்கார வாகனங்களும் அணிவகுத்தன.

ஊா்வலம் மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நாகூா் அலங்கார வாயிலை இரவு சென்றடைந்தது. ஊா்வலத்தில் இன்னிசை முழக்கங்கள் மற்றும் இறைவணக்கப் பாடல்கள் இடம் பெற்றன. பின்னா் தாா்காவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்கு பின்னா் இரவு பெரிய மனோரா உள்ளிட்ட 5 மனோராக்களிலும் கந்தூரி விழாவுக்கான புனிதக் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி நாகூா் தா்கா முழுவதும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கந்தூரி ஊா்வலத்தையொட்டி நாகை-நாகூா் இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கந்தூரி விழாவுக்கு பக்தா்கள் வந்து செல்வதற்காக, அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com