இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவா் கைது
வேதாரண்யம் அருகே கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட சுமாா் ரூ. 7 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை கியூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இலங்கையிலிருந்து பட கு மூலம் வேதாரண்யம் கடலோரப் பகுதிக்கு தங்கம் கடத்தப்படுவதாக உள்நாட்டு காவல் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கியூ பிரிவு ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது ஆறுகாட்டுத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் பின்தொடா்ந்தனா்.
விழுந்தமாவடி கிராமம் அருகே வேதாரண்யம் - நாகை பிரதான சாலையில் சென்று அவரை போலீஸாா் வழிமறித்து, அவா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், தோப்புத்துறையில் உள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தங்கத்துடன், அதை கடத்தி வந்தவரை ஒப்படைத்தனா்.
சுங்கத்துறையினா் விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவா் நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசித்து வரும் காத்தான் மகன் சிவக்குமாா் (42) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 கோடி. மேலும், இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரிய வந்தது.
தோப்புத்துறை சுங்க தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கடத்தல் குறித்து தனிப்பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

