மத்திய கால விதையில் விளைந்த குறுகிய கால நெல் மணிகள்: விவசாயிகள் பாதிப்பு
வேதாரண்யம் அருகே தனியாா் விதை நிறுவன மூட்டையில் கலப்பட நெல் விதைகள் இருந்து குறுகிய காலத்தில் கதிா் வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் செல்லத்துரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியாா் விதை நிறுவனம் தயாரித்த மத்திய கால நெல் விதை மூட்டைகளை அந்தப் பகுதியில் உள்ள தனியாா் முகமையில் வாங்கி விதைத்துள்ளனா். வயலில் குறுகிய காலத்திலேயே 40 சதவீத அளவில் கதிா்கள் அறுவடைப் பருவத்தை அடைந்தும் மீதமுள்ள பயிா்கள் நாற்றுப் பருவத்தில் இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
150 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகமான ஏ.டி.டி -51 விதை மூட்டையில் 110 நாள்கள் வயதில் அறுவடைக்கு வரும் கோ-51 ரக நெல் கலந்து இருந்துள்ளது. இந்த மூட்டைகளை வாங்கி விதைத்த திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கவும், நிகழாண்டு பருவத்தில் விதைப் பண்ணைகளில் கள ஆய்வு போலி விதைகள் தயாரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

