கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா்.
கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
Published on

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த காரை போலீஸாா் நெருங்கியபோது, ஓட்டுநா் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். ஆனால், காரின் அருகில் நின்றிருந்து தப்பியோட முயன்றவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். விசாரணையில், அவா் மதுரையைச் சோ்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. காருடன் தப்பிச் சென்றவா் சற்று தொலைவில் வாய்க்கால் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.

போலீஸாா் காரை சோதனையிட்டபோது அதில் சுமாா் 200 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுவந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், கடத்தலில் தொடா்புடையவா்களைத் தேடிவருகின்றனா்.

Dinamani
www.dinamani.com