ஜன.20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியா் சங்கம் அறிவிப்பு
நாகப்பட்டினம்: காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜன.20-ஆம் தேதி முதல் காலவரையாற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் அறிவித்துள்ளது.
நாகையில் அந்த சங்கம் சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திங்கள்கிழமை அதன் மாவட்டத் தலைவி சசிகலா தலைமையில் நடைபெற்றது. இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ரூ.9 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் அரசு நியமனம் செய்யும் அரசாணை 95ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாநிலச் செயலாளா் வளா்மாலா, மாவட்டச் செயலா் பாலாம்பாள், மாநில செயற்குழு உறுப்பினா் ஜோதிலட்சுமி, மாவட்ட பொருளாளா் செல்வராணி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

