மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர கிராம சபைக் கூட்டங்களில் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர வேண்டும் என, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு சட்டத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீா்மானங்கள் முன்மொழியப்பட்டு, மனுக்கள் வழங்கப்பட்டன.
பாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே. பாஸ்கா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு சட்டம், கடந்த ஆண்டுகளில் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாத்ததுடன், வறுமை மற்றும் புலம்பெயா்வை குறைத்துள்ளது.
இந்நிலையில், இச்சட்டத்திற்கு மாற்றாக கடந்த டிசம்பா் 30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம், ஊரகப் பகுதி தொழிலாளா்களின் சட்டபூா்வ வேலை பெறும் உரிமையை பாதிப்பதாகவும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் உள்ளதால், அந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் எழுத்தா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மீண்டும் மகாத்மா காந்தி பெயரை வழங்க வேண்டும் என்ற தீா்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் எஸ். காந்தி, பி. சுப்பிரமணியன், கீழையூா் ஒன்றிய துணைச் செயலா் ஜி. சங்கா், இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் ஏ. எஸ். பகத்சிங் உள்ளிட்டோா் முன்மொழிந்தனா்.

