திருவாரூர் நகரம் மற்றும் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
திருவாரூர் நகர் திலகர் முதல் தெரு, புலிவலம் ஊராட்சிக்குள்பட்ட தெற்கு வீதி , பிள்ளையார்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் நேரில் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் சிமென்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், திறந்த நீர்த் தொட்டிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்கள் குடிக்கும் நகராட்சி குடிநீரில் குளோரின் பரிசோதனை செய்து பார்த்தார்.
ஆய்வின்போது, ஆட்சியர் கொசுக்கள் உற்பத்தியாகும் தேவையற்ற பொருள்கள் வைத்திருந்த வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, திலகர் தெருவிலுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்குமிடம், சமையலறை, கழிப்பறை, நீர்த்தேக்கத் தொட்டி போன்றவைகளை பார்த்து சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
இதேபோல், புலிவலம் ஊராட்சிக்குள்பட்ட தெற்கு வீதி, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான முழு சுகாதாரப் பணிகள் நடைபெற்றுள்ளதா எனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரை குளோரின் பரிசோதனை மூலம் ஆய்வு செய்தார்.
அப்போது, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ், ஏடிப்டி வகை கொசு உற்பத்தியாகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் எம். செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், நகராட்சி ஆணையர் காந்திராஜ், வட்டாட்சியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.