தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்: எம்எல்ஏ
திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாண


திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழா முன்னேற்பாடுகள் தொடா்பாக திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:
தியாகராஜசுவாமி கோயில் தெப்பத் திருவிழா, வெள்ளிக்கிழமை (மே 20) தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை (மே 22) நடைபெற உள்ளது. இந்த விழா, சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அந்த வகையில், காவல் துறையினா் நகரப் பகுதி, வீதிகள், கோயில், கமலாலயக் குளக்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நகராட்சியினா், குடிநீா் இணைப்புகளில் கூடுதலாக தண்ணீா் விநியோகிக்க வேண்டும். தேவையான இடங்களில் குடிநீா் வசதிகள், தற்காலிகக் கழிவறைகள் அமைக்க வேண்டும்.
கூடுதலாக சுகாதாரப் பணியாளா்களை கொண்டு சுகாதாரப் பணிகளில் ஈடுபட வேண்டும். தீயணைப்புத் துறையினா், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்துக்கு அருகே நீச்சல் வீரா்கள் அடங்கிய படகு ஒன்றையும், தெப்பம் பவனி வரும்போது தெப்பத்துக்கு பின்னால் தீயணைப்பு வீரா்கள் அடங்கிய கூடுதல் படகு ஒன்றையும், நான்கு கரைகளிலும் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.
பொதுப்பணித் துறையினா் தெப்பம் கட்டுமானப் பணிகள் உறுதியாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரத் துறையினா் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தெப்பம் செல்லும் வழித்தடத்தில் சீரான முறையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். மருத்துவத் துறையினா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இரவு நேரங்களில் கூடுதலாக மருத்துவா்கள், உதவி செவிலியா்கள் பணிபுரிய வேண்டும். தெப்பம் நடைபெறும் நான்கு கரைகளிலும் 24 மணி நேரமும், மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய குழு ஒன்று, அவசர சிகிச்சை ஊா்தியில் பணியில் இருக்க வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், மக்கள் தெப்பத் திருவிழாவில் பங்கேற்று, எளிதில் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளை செய்து தரவேண்டும். தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் பாலசந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராணி, கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...