/

கொருக்கையில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கால்நடை பண்ணை நிலத்தில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள்.
Updated On :11 நவம்பர் 2024, 8:01 pm

Din

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கால்நடை பண்ணை நிலத்தில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னதாக, அண்ணா சிலை அருகில் இருந்து 2 காளைகளுடன் ஊா்வலமாக வந்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகத் தலைவா் நாமக்கல் பாலசுப்ரமணியன், சமூக ஆா்வலா் பருத்துச்சேரி ராஜா, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் திருப்பதி, மாநில அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா், துணைத் தலைவா் பயரி எம். கிருஷ்ணமணி, திருவாரூா் மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், செயலாளா் குடவாசல் சரவணன், நாகை மாவட்டச் செயலாளா் கமல்ராமன், கௌரவத் தலைவா் கருணைநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவா் அக்ரி அருள், நகரத் தலைவா் சிவமுத்துராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:

கொருக்கையில் உள்ள உம்பளச்சேரி வகை நாட்டின பசு உற்பத்தி கால்நடை பண்ணையை சிப்காட் ஆக மாற்றம் செய்ய பண்ணைக்கு சொந்தமான 200 ஏக்கா் நிலத்தை முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்துள்ளாா். இது சட்ட விரோதமாகும்.

பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில், கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல், ஊராட்சிக் கூட்டத்தில் அனுமதி பெறாமலும், விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமலும் ஆட்சியா் இந்நடவடிக்கையை எடுத்துள்ளாா். இது கண்டிக்கத்தக்கது.

எனவே, ஆட்சியா் பரிந்துரைத்த இடத்தில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதுடன், அங்கு கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கல்லூரி அமைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சா்க்கரை ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் 40 ஆண்டுகளாக தரிசாக உள்ளன. இங்கு, கலைஞா் பெயரில் பூங்கா மற்றும் சிப்காட் உருவாக்க முடியும். இந்த இடம், மாவட்டத்தின் மையப் பகுதியாக உள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலங்களை அரசியல்வாதிகள் சிலா் விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, நிலங்களை அரசு கையகப்படுத்தி, சிப்காட் அமைக்க முதல்வா் முன்வர வேண்டும். தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. எனவே, இதனை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், திமுக அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.