

திருவாரூா்: திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போட்டா ஜியோ சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் குடும்பங்களுக்கான கருணை அடிப்படை பணி நியமனங்கள் 5 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை மாற்றி, தகுதியுள்ள அனைவருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியா் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி, மாநில அளவிலான முன்னுரிமையை அமல்படுத்தும் அரசாணை 243-ஐ திரும்ப பெற வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளா் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர பணியாளா்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊா்தி ஓட்டுநா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஆசிரியா், அரசு அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான போட்டா ஜியோ சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுபாஷ், ராஜசேகா், நாகேஸ்வரன், ரஜினி, தமிழ்ச்செல்வன், மணிகண்டன், தமிழ்காவலன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஈவேரா, மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் செங்கேணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா்.
மேலும், ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போட்டா ஜியோ நிா்வாகிகள் தெரிவித்தனா்.