போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்
போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்

சிஐடியு நிா்வாகிகள் கைதைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூா் நகர காவல் நிலையத்தை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சங்க நிா்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம்
Published on

சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூா் நகர காவல் நிலையத்தை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சங்க நிா்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் தொடா்பாக பல்வேறு பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று, கோரிக்கை நிறைவேறாததால், அண்மையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கோரிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதுடன், போராட்டக் குழுவினா் மீது வழக்கு பதியப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த போராட்டம் தொடா்பாக சிஐடியு மாவட்டச் செயலாளா் அனிபா, மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம். ராஜேந்திரன், இணைச்செயலாளா் ஜி. பழனிவேல், உறுப்பினா்கள் ஆா். ஐயப்பன், டி. முருகதாஸ், ஜெ. விஜயசந்தா், பாலமுத்து ஆகிய 7 போ் திங்கள்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், உறுப்பினா்கள் 3 போ் திருவாரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்த நிலையில், அலுவலகத்தில் புகுந்து அவா்களையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது. நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக பேரணியில் சென்ற கட்சி நிா்வாகிகள், நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழ்வில், மாவட்ட செயலாளா் டி.முருகையன், மாநில குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு பொறுப்பாளருமான ஜி.சுந்தரமூா்த்தி, சிஐடியு மாவட்டத் தலைவா் கே.பி. ஜோதிபாஸ், மாநிலக் குழு உறுப்பினா் ரா. மாலதி உள்ளிட்டோா் நகர காவல் நிலையம் முன் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சென்ரிக் மேனுவல் ஜாபி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், சம்பவம் தொடா்பாக மேலும் கைது நடவடிக்கை இருக்காது, புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் தலைமையில் பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com