கனமழை எச்சரிக்கை: தயாா் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவாரூா்: மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கக்கூடிய இடங்களை ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
நவ.27 முதல் 30-ஆம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலொ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலா்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது: மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து, தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மழைநீா் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டாா் பம்புகளை தயாா்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மழையை எதிா்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

