மலர்களுக்கு உயிர் கொடுக்கும் கலை!
மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் மலர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன என்றால் அது மிகையில்லை. திருமணம் போன்ற இனிய தருணங்களிலும், துன்பம் வாட்டும் வேளைகளிலும் மலர்கள் மனித வாழ்வில் ப


மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் மலர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன என்றால் அது மிகையில்லை.
திருமணம் போன்ற இனிய தருணங்களிலும், துன்பம் வாட்டும் வேளைகளிலும் மலர்கள் மனித வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
பெண்களின் கூந்தலில் மட்டுமல்ல, இல்லங்கள், திருமண நிகழ்வுகள், ஆண்டவன் உறையும் ஆலயம் என அனைத்து இடங்களிலும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மலர்களை வெறுப்பவர்கள் உண்டோ?
ஜப்பான் போன்ற நாடுகளில் விதவிதமான, வண்ண வண்ண மலர்களை ஒழுங்குபடுத்தி அலங்கரித்து அழகுபடுத்துவதை ஒரு கலையாகச் செய்துவருகின்றனர்.
அங்கெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்கூட அவ்வப்போது விவாதிக்கப்படும் அளவில் புகழ் பெற்றுள்ளது இப் "பூ' கலை.
இக்கலை ஜப்பானிய மொழியில் "இகெபனா' என்று அழைக்கப்படுகிறது. அதாவது, "இகெபனா' என்றால் பூக்களுக்கு உயிர் கொடுப்பது என்று அர்த்தமாம்.
"பூக்களை நேசிப்பவர்கள் சக மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிர்களையும் நேசிப்பார்கள்' என்று ஜப்பானில் கூறுவதுண்டு. உயிர்களை நேசிப்பவர்கள் அங்கு மட்டுமா இருக்கிறார்கள்? அதற்கு நம் நாடுதானே முன்னோடி! ஆம், "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று மனிதர்களுக்காக மட்டுமின்றி, தாவரங்களுக்காகவும் மனம் இரங்கிய வள்ளலார் போன்ற மாமனிதர்கள் பிறந்த புண்ணிய தேசமல்லவா இது? தில்லி மயூர்விஹாரை சேர்ந்த மீனா ஐயர், இக்கலையை தில்லிவாசிகளிடமும் பரப்பி வருகிறார்.
ஜப்பானில் இருந்தபோது இக்கலையைப் பயின்ற மீனா ஐயர், தில்லியில் இகெபெனா தொடர்பான ஓ'ஹரா கிளையைத் தொடங்கி பலருக்கும் இக்கலையைக் கற்றுக் கொடுத்து வருகிறார். அவ்வப்போது மலர்க் கண்காட்சியையும் இந்த அமைப்பு மூலம் நடத்தியும் வருகின்றார்.
தில்லி இந்தியா இன்டர்நேஷனல் மையத்தில் சில தினங்களுக்கு முன்பு இகெபனா மலர்க் கண்காட்சி ஒ'ஹரா தில்லிக் கிளையின் சார்பில் நடைபெற்றது.
வண்ண, வண்ண மலர்கள், அழகழகான பூச்சாடிகளிலும் சிறிய செவ்வகத் தொட்டிகளிலும் கலை நயத்துடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காரனேஷன், ஆர்க்கிட், டிரைசினா, லில்லி, கிரசாந்திமம், அந்தூரியம், செவ்வந்தி என பலவித மலர்களால் விதவிதமான பூச்சாடிகளில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காண்போரின் கண்களுக்குக் குளிர்ச்சியையும் மனத்துக்கு மகிழ்ச்சியைம் அளித்தன.
மலர்களின் வாசத்தினூடே இக்கண்காட்சி குறித்து மீனா ஐயரிடம் பேசினோம்.
""எனது கணவர் ஜி.எஸ். ஐயர் ஜப்பானில் தூதரகத்தில் பணியாற்றிய சமயம். நாங்கள் குடும்பத்துடன் அங்கே இருந்தோம். தூதரக அதிகாரி என்பதால் பெரிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வருவர். அவர்களை வரவேற்பதற்காக பூங்கொத்து கொடுப்பது வழக்கம். அதற்காக வெளியே சென்று பூக்களை வாங்க வேண்டியிருந்தது.
பெண்களுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜப்பானில் பூ அலங்காரக் கலையான இகெபனா பற்றி அறிந்தேன். வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயத்தில் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டேன். எனது கணவரும் என்னை ஊக்குவித்தார்.
பூக்களை அழகாக இலை, காம்பு, தண்டுடன் வெட்டுவது, அவற்றை அழகிய பூச்சாடியில் வைப்பது, நீளம், அகலம், கோணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பூக்களை வரிசையாக ஒழுங்குபடுத்துவது என பல நுணுக்கமான விஷயங்கள் இக்கலையில் இருப்பது தெரிய வந்தது. இதனால், இதை முழுமையாக கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன்.
இதற்காகக் கூடுதல் நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தேன்.
ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வந்த பிறகு தில்லியில் இக்கலைப் பிரிவைத் தொடங்கத் திட்டமிட்டோம். இக்கலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய ஓ'ஹரா என்பவரின் பெயரில் தில்லிக் கிளையை 1990-ம் ஆண்டு தொடங்கினோம். அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமனின் மனைவி ஜானகி வெங்கட்ராமனும், ஜப்பானியத் தூதரின் மனைவியும் தொடங்கிவைத்தனர்.
அதன் நிறுவனர் தலைவராக நான் இருந்தேன். தற்போது இந்த அமைப்பின் துணைத் தலைவராக உள்ளேன். இக்கலையை விரும்புவோருக்கும் கற்றுத் தருகிறேன்.
பூக்களை அலங்கரித்து சாடியில் வைப்பது மட்டுமல்ல இக்கலை, இந்தக் கலையில் ஈடுபடும்போடு படைப்பாற்றல் திறன் அதிகரிக்கிறது. மனம் ஒருமுகப்படுகிறது.
தற்போது நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, ரோமானியா, கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, போலந்து உள்பட 27 நாடுகளின் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்கள் போன்று தனித்தனியாக பூக்களை அலங்கரித்து காட்சிப்படுத்தினோம். இதில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டோம். நல்ல வரவேற்புக் கிடைத்தது.
அரவிந்த ஆசிரம அன்னையின் பிறந்த நாளில் தில்லியில் இதே போன்று மலர்க் காட்சியை நடத்தவும் உள்ளோம்.
இக்கலையைப் பயில்வதில் பல நிலைகள் உண்டு. நுணுக்கமான மலர் அலங்காரக் கலையை பல ஆண்டுகளாகப் பயின்று வருகிறேன். தற்போது மாஸ்டர் 2-ம் நிலைக்காக விரைவில் ஜப்பான் செல்ல உள்ளேன். இந்தக் கலையை வர்த்தக ரீதியாக செய்தால் நிறைய பணம் ஈட்டலாம். ஆனால், என்னுடைய நோக்கம் அதுவல்ல. இது ஆத்ம சுத்திகரிப்புக்கான கலையாகவே பார்க்கிறேன் என்று புன்முறுவலுடன் கூறுகிறார் மீனா ஐயர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...