விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மிருதங்கம் வாய்ப்பாட்டில் மனம் மயக்கும் மாணவர்!

பள்ளிப் பாடப் புத்தகங்களைப் புரட்டவே நேரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்த் துக் கொள்ளும் பல மாணவர்கள் மத்தியில், படிப்பிலும் ஜொலித்து, மிருதங்கம், வாய்ப்பாட்டு என கலைகளிலும் தடம் பதித்து வருகிறார் புது

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:49 pm

வே.சுந்தரேஸ்வரன்

பள்ளிப் பாடப் புத்தகங்களைப் புரட்டவே நேரம் கிடைக்கவில்லை என்று அங்கலாய்த் துக் கொள்ளும் பல மாணவர்கள் மத்தியில், படிப்பிலும் ஜொலித்து, மிருதங்கம், வாய்ப்பாட்டு என கலைகளிலும் தடம் பதித்து வருகிறார் புதுவை பி. மனோகர் (17).

தில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் 12-ம் வகுப்புப் படித்து வரும் இவர் இதுவரை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 300 மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.

 தில்லிப் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஆசியா ஆராய்ச்சிப் படிப்புத் துறையின்

பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவரது தந்தை பாலசந்திரனும், உலக வங்கியில் பணியாற்றிய இவரது தாயார் ரமா பாலசந்திரனும் இசையில் மனோகருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டறிந்து ஊக்குவிததார்கள்.

கேசவபுரத்தில் உள்ள மனோகரின் இல்லத்தில் காலை வேளையில் சாதகம் செய்து கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம்.

""5 வயதில் மிருதங்கம் வாசிக்க கற்கத் தொடங்கினேன். மிருதங்க வித்வான் கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம் அவர்களின் தலைமை சீடரான கும்பகோணம் என். பத்மநாபனிடம் 1999-ம் ஆண்டில் இருந்து மிருதங்கம் கற்று வருகிறேன்.

தில்லி பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் குருவாயூர் டி.வி. மணிகண்டன் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு பயின்று வருகிறேன். எனது முதல் மிருதங்க அரங்கேற்றம் 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது கையெழுத்துடன்

கூடிய வாழ்த்துக் கடிதம் அனுப்பியது மறக்கவே முடியாது.

தில்லியில் உள்ள காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ், கேரளா கிளப், மியூசிக் அப்ரிசியேஷன் சென்டர், நேரு பால சமிதி, இசை நேயர்கள் சங்கம், கலா கேரளம், தில்லித் தமிழ்ச் சங்கம், குருவாயூரப்பன் கோயில் சங்கம், ஐஸ்வர்யா மகா கணபதி ஆலயம் ஆகியவை மூலம் நடத்தப்பட்ட பல்வேறு இசைப் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளேன்.

 சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்கள் தவிர சிங்கப்பூர், ஜப்பான், துபை  போன்ற வெளிநாடுகளுக்கும் இசை நிகழ்ச்சிக்காகச் சென்று வந்துள்ளேன்.

பிரபல இசை விமர்சகர் சுப்புடுவிடம் ஆசி பெறுவதற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இது மறக்க முடியாத அனுபவம்.

2007-ம் ஆண்டில் விஜயதசமி நாளின்போது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன்னிலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்து அவரது பாராட்டைப் பெற்றேன்'' என்று கூறுகிறார்.

மனோகரின் தந்தை பாலசந்திரன் புதுவையை பூர்விகமாகக் கொண்டவர். தில்லிப் பல்கலைக்கழகத்திற்குப் மேல்படிப்பு படிக்க வந்து, பின்னர் அங்கேயே பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

மனோகருக்கு 2 வயதாகும்போதே அவரிடம் இசை ஆர்வம் உள்ளதை அறிந்த பெற்றோர்  அவரை இசைப் பயிற்சியில் ஈடுபடச் செய்தனர்.

வாய்ப்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றில் மனோகர் இளநிலைப் பட்டயப் படிப்பு முடித்துள்ளார்.

சங்கீத பூஷண், சிசிஆர்டி கல்வி உதவி விருது, டி. பாலகிருஷ்ணன் நினைவு விருது, பாலா லய நிபுணா விருது, கலா பூஷண் விருது, பாலஸ்ரீ, சி. சுப்பிரமணியம் விருது, கும்பகோணம் ஸ்ரீ எம். சிங்காரம் பிள்ளை விருது, உடுமலை டி. மயில்சாமி விருது  உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். வாய்ப்பாட்டு, பக்கவாத்தியம் இரண்டையும் எப்படி எதிர்கொள்கிறார் மனோகர்?

""எனக்கு வாய்ப்பாட்டில் தேர்ச்சி இருப்பதால் நான் பக்க வாத்தியம் வாசிக்கும்போது பாடகரின் பாட்டுக்கு ஏற்ப பக்கவாத்தியம் வாசிப்பது எளிதாக இருக்கிறது.

 மிருதங்கம் வாசிப்பில் ஈடுபடும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அமைதி, பொறுமை ஏற்படுவதுடன் நினைவுத் திறனும் அதிகரிக்கிறது. மனம் ஒருமுகப்படுகிறது.

இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது'' என்கிறார்.

காகிதத்திலும் கலை வண்ணம்!

விடுமுறை நாள்களை இசைப் பயிற்சிக்காகவே நான் அதிகம் பயன்படுத்துகிறேன். இசை மட்டுமின்றி "ஓரிகாமி' எனும் காகிதத்தை மடித்து பலவித பொருள் தயாரிக்கும் ஜப்பானியக் கலையைக் கற்று, அதன் மூலம் பலவித காகிதக் கலைப் பொருள்களை உருவாக்கி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசாக அளித்து வருகிறேன்.

 படிப்பில் மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்து விளங்கியதால் நான் படித்த மான்ட்போர்டு பள்ளியின் 2004-05-க்கான சிறந்த மாணவராகவும் அறிவிக்கப்பட்டேன்.

 முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இந்தியத் தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையர் என். கோபாலசாமி ஆகியோரின் பாராட்டையும் பெற்றுள்ளேன். புதுவை முதல்வர் ஆர். ரங்கசாமி என்னைப் பாராட்டிப் பரிசு வழங்கியுள்ளார்.

  எனது ஆசையெல்லாம் கர்நாடக சங்கீத வித்வான்கள் டி.எம். கிருஷ்ணா, சஞ்சய் சுப்பிரமணியம் ஆகியோருக்குப் பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும். கர்நாடக சங்கீதத்திற்கும், ஹிந்துஸ்தானி இசைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே.

கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைகளில் எண்ணற்ற நல்ல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் இசைப் பிரியர்களுக்குச் சென்றடையும் விதமாக ஆய்ந்தறிந்து பரிமாற வேண்டும்.

 வாழ்க்கைக்கான வருமானம் ஈட்ட ஒரு வேலை வேண்டும் என்பதால் கட்டடவியல் துறையில் உயர் கல்வியைக் கற்க உள்ளேன். எனினும், இசைதான் எனது வாழ்க்கையின் ஆதாரம் என்று முகம் மலரக் கூறுகிறார் புதுவை மனோகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.