தில்லி - கன்னியாகுமரிக்கு தினசரி ரயில் எப்போது?
புது தில்லி, அக். 24: தில்லியிலிருந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர ஊர்களுக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து சேவையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, "தில்லி தமிழ் ரயி


புது தில்லி, அக். 24: தில்லியிலிருந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர ஊர்களுக்குச் செல்வோருக்கு உதவும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து சேவையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி, "தில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கம்' என்ற அமைப்பு தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து தமிழகத்தில் சென்னனை தவிர பிற ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் தற்போது பல்வேறு சிரமங்களையும், சோர்வையும் அடைகின்றனர்.
அவர்கள் தில்லியில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். அங்கிருந்து தென் மாவட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானால், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்து ஆட்டோ முதலிய வாகனங்களைப் பிடித்து, எழும்பூர் ரயில் நிலையம் வரவேண்டும். அங்கு 10 மணி நேரம் வரை காத்திருந்த பிறகுதான் தங்களது ஊருக்குச் செல்லும் ரயிலைப் பிடிக்க இயலும். நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் தில்லியிலிருந்து தமிழகத்தின் இதர நகரங்களுக்கு நேரடியாகச் செல்ல எந்த ரயிலும் இல்லை. இந்த நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணி, தொழில், தனியார் வேலை ஆகியவை நிமித்தமாக தில்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் சுமார் 14 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் தில்லி, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா மத்திய அரசுப் படைகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் விசேஷத்துக்கோ விடுமுறையைக் கழிக்கவோ தமிழ்நாட்டுக்கு வர தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ், ராஜதானி, துரந்தோ ஆகிய ரயில்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துடன் நின்றுவிடும். மேற்கொண்டு தங்கள் ஊருக்குச் செல்வதற்கு இவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தில்லியிலிருந்து மதுரைக்குச் செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் (செவ்வாய், வியாழன்), கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் (சனிக்கிழமை), கேரள மாநிலம் வழியாகச் செல்லும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், நவயுக் எக்ஸ்பிரஸ் ஆகியவை வாரம் ஒரு நாளும் இயக்கப்படுகின்றன. எனவே, சென்னை வரை செல்லும் ரயில்களில் வந்து, அங்கிருந்து ஆட்டோ, டாக்ஸிக்கு செலவழித்து எழும்பூர் ரயில் நிலையம் சென்று, பல மணி நேரம் தேவையின்றிக் காத்திருந்த பிறகே தங்களது ஊருக்குச் செல்லும் ரயில்களைப் பிடிக்க இயலும். இவர்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களிலிருந்து தென் மாவட்டங்களில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கும் இதே சிரமம்தான்.
தென் மாநிலங்களில் தமிழகத்துக்கு மட்டுமே இந்த அவல நிலை. கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வோருக்கு இந்தக் கஷ்டம் இல்லை.
""இந்திய ரயில்வே தில்லியில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்குத் தலா இரு தினசரி ரயில்களை இயக்கி வருகிறது. ஆந்திரப் பிரதேசம் செல்லும் ஆந்திரா எக்ஸ்பிரஸ் அந்த மாநிலத்தின் மேற்கு, மத்தியப் பகுதிகளையும், தக்ஷிண் எக்ஸ்பிரஸ் கிழக்குப் பகுதியையும் சென்றடையும் வகையில் இயக்கப்படுகின்றன.
கர்நாடகத்துக்குச் செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் அம்மாநிலத்தின் வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதிகளையும், மங்களா எக்ஸ்பிரஸ் மேற்குப் பகுதி முழுவதையும் சென்றடையும் வகையில் இயக்கப்படுகின்றன.
கேரளத்துக்கு இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வரை செல்கிறது. மங்களா எக்ஸ்பிரஸ் கேரளத்தின் வட பகுதியைச் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கான ஜி.டி. எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போன்றவை சென்னை சென்ட்ரலுடன் நின்றுவிடுகின்றன. இதைப் பார்க்கும்போது, தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது'' என்கிறார் தில்லி தமிழ் ரயில் பயணிகள் சங்கத்தின் செயலர் எஸ். சுந்தரம்.
""ஏற்கெனவே, வாரம் ஒருமுறை இயக்கப்படும் தில்லி - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை நாள் நீட்டிப்புச் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சர், அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், உரிய பலன் கிடைக்கவில்லை. ஆகவே, தில்லி - கன்னியாகுமரி இடையே நேரடி தினசரி ரயில் இயக்க வலியுறுத்த தமிழர்களிடையே விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் அளித்து வருகிறோம்'' என்று சங்கத்தின் உறுப்பினர் ஆர். குணசேகரன் கூறினார்.
""வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர விரும்புகின்றனர். ஆனால், போதிய ரயில்கள் இணைப்பு வசதி இல்லை.
தமிழகத்தின் பெருமை மிக்க சிதம்பரம், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய கோயில் நகரங்களுக்கும், கொடைக்கானல், குற்றாலம் ஆகிய சுற்றுலா இடங்களுக்கும் தில்லியில் இருந்து தினசரி இயக்கப்படும் வகையில் நேரடியாக ரயில் இணைப்பு வசதி இல்லை. இதனால், தமிழகம் சுற்றுலா வருவாயை இழக்கிறது. எனவே, இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபாலிடம் மனு அளித்துள்ளோம்'' என்று நொய்டாவிலுள்ள அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலர் கிருஷ்ணமாசாரி தெரிவித்தார்.
""தில்லி- கன்னியாகுமரிக்கு நேரடி ரயில் விடக் கோரி ரயில்வே அமைச்சரையும், ரயில்வே போர்டு சேர்மனையும் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்த உள்ளோம்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர். முகுந்தன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...