கண்களைக் கவர்ந்த நடனக் கலை நிகழ்ச்சிகள்
நாட்டின் பல்வேறு மாநிலங்களின் நடனக் கலைகளை ஒரே மேடையில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. எங்காவது ஒன்று சேர்ந்து நடன நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க முடியுமா என்கிற ஏக்கத்தைப் போக்கும் விதமாக


நாட்டின் பல்வேறு மாநிலங்களின் நடனக் கலைகளை ஒரே மேடையில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. எங்காவது ஒன்று சேர்ந்து நடன நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க முடியுமா என்கிற ஏக்கத்தைப் போக்கும் விதமாக தமிழர் சங்கம் ஒன்று முயன்று வருகிறது! பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே கலாசார கலை நிகழ்ச்சியை நிகழ்த்தி வருகின்றனர் நொய்டா அவ்வை தமிழ்ச் சங்கத்தினர்.
நொய்டாவில் உள்ள "கிரேட்டர் இந்தியா பிளேஸ் மால்' வளாகத்தில் இரு தினங்களாக இந்த அமைப்பினர் நடத்திய பிரமாண்ட நடனக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இந்திய நடனக் கலைகள் மீது பொதுமக்களின் பார்வையைத் திருப்பச் செய்வதாக அமைந்திருந்தது என்பதற்கு ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததே சாட்சி.
நொய்டா அவ்வைத் தமிழ்ச் சங்கமும், கிரேட் இந்தியா பிளேஸ் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. ஆற்றல் சேமிப்பை வலியுறுத்துவதை விழாவின் மையக் கருவாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தில்லி, என்.சி.ஆர். பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கலை, நடன அமைப்புகளைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் சுமார் 300 பேர் பங்கேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து நொய்டாவில் உள்ள பவானியின் பிரசன்னாலயா குழுவினரின் "யுவசக்தி' நாட்டிய நாடகம் நடைபெற்றது. இளைஞரின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு அதை எப்படிக் கொண்டு செல்வது என்பதை இந்த நாட்டிய நாடகம் மூலம் விளக்கப்பட்டது.
இளம் சிறார் வண்ணப் பூக்களாக மேடைகளில் நடம்புரிந்தனர். இதே போன்று, நாட்டியார்ச்சனா பரதநாட்டிய மையம், பாமினி சேகரின் நிருத்யாலயா பள்ளி கலைஞர்களின் நாட்டியமும், நிருத்யபாரதி குழுவினரின் பரதநாட்டியமும் பார்வையாளரின் பாராட்டைப் பெற்றன.
பார்வையாளர்கள் ரசித்த கொடிபுவா: விழாவில் பிரதானமாக ஒடிசா மாநிலத்தின் கொடிபுவா நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி ஜொலித்தது. "நடனக் கலை எளிதான விஷயமல்ல; நுட்பமும், திறமையும் வெளிப்படும் ஓர் உன்னதக் கலை' என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது இந்த நடனம். இதில், ஒடிசா மாநிலம், புரியைச் சேர்ந்த பாபா கோரக்நாத் கொடிபுவா நடனச் சங்கத்தினர் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் மேற்கத்திய இசை நடனம், பரத நாட்டியம் என பலவித நடனங்கள் மூலம் காண்போரின் கண்களுக்கு நடன இசை விருந்தை அளித்தனர்.
பலதரப்பட்ட மக்கள் கூடும் மாலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதைப் பார்க்கும்போது கலைகளால் தேசம் ஒன்றிணையும் என்ற நம்பிக்கை வலுத்தது.
இந்த ஆண்டு பல்வேறு பொதுநலம் குறித்த கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆற்றல் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக "கார் பூல் கிளப்' ஏற்படுத்தியுள்ளோம். ஆற்றல் சேமிப்பை வலியுறுத்தும் கையெழுத்து முகாமும் நடத்தப்பட்டுள்ளது'' என்று அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் வி. கிருஷ்ணமாச்சாரி தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் சங்கரன், பொருளாளர் சுவாமிநாதன், இணைச் செயலர் வி.பி. சாமி, சந்தோஷ், டாக்டர் வளவன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இளங்கன்றுகளின் பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சிகள் இந்திய மண்ணின் பாரம்பரியம், கலாசாரத்தின் வேர்களுக்கு நீர் வார்ப்பதுபோல் விளங்குகின்றன.
சீன ஆப்பிளின் படையெடுப்பு!
புது தில்லி, ஜன.30: தில்லியில் உள்ள பழ விற்பனைச் சந்தைகளை சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் காஷ்மீர், ஹிமாசலப் பிரதேச ஆப்பிள் உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
உள்நாட்டு ஆப்பிள்களை ஓரங்கட்டும் அளவுக்கு சீன ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு பழச் சந்தைகளில் குவிக்கப்படுவதால் தங்களது எதிர்காலம் இருண்டு காணப்படுவதாக இரு மாநிலங்களின் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தில்லி பழச் சந்தைகளை ஆக்கிரமித்திருக்கும் சீன ஆப்பிள்கள் ஷான்ஸி மாகாணத்தில் இருந்து ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ஆப்பிள்கள் சற்று சதைப்பற்றுடன் மிகவும் பளபளப்பாகக் காணப்படுவதால் நுகர்வோர் இவற்றைப் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
சீன ஆப்பிள்கள் மிகவும் பிரபலமாகி வருவதால், தில்லி ஆஜாத்பூர் சப்ஜி மண்டி (நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்) ஆப்பிள் வியாபாரிகள் மிகவும் கவலை கொண்டுள்ளனர். சீன ஆப்பிள்கள் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் வகைகளுக்கு மவுசு குறைந்து வருகிறது என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இறக்குமதித் தீர்வை மிகவும் குறைவாக இருப்பதால், சீன ஆப்பிள்கள் தில்லி பஜாரில் குவிக்கப்படுகின்றன. இதனால் தீர்வையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று ஆஜாத்பூர் சப்ஜி மண்டி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"வருகிற மே-ஜூன் மாதம் வரையில் சீன ஆப்பிள்கள் தில்லி சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும். உள்நாட்டு ஆப்பிள்களைக் காட்டிலும் சீன ரக ஆப்பிள்கள் பெரும் அளவில் சந்தைகளில் கிடைக்கின்றன. இதனால் காஷ்மீர், ஹிமாசலப் பிரதேச ஆப்பிள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது' என்று பழங்கள், காய்கறிகள் வியாபாரிகள் சம்மேளனத் தலைவரும் ஆப்பிள் வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளருமான மேதாராம் கிருபளானி தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களாலும் உள்நாட்டு ரகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ஆப்பிள் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சீன ஆப்பிள்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் விவகாரம் நாடாளுமன்றத்திலும் அண்மையில் எழுப்பப்பட்டது.
"சீன ஆப்பிள்களில் கிருமிகள் இருக்கக்கூடும். இதனால் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று பன்னாட்டு வேளாண் உயிரி அறிவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது' என்று உணவுக் கொள்கை நிபுணர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார்.
"இறக்குமதி உணவுப் பொருள்களைக் கண்காணிக்கும் உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம்தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் சஞ்சய் தவே சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...