விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வட இந்தியர்களின் மனம் கவரும் தமிழக இட்லி, சாம்பார்!

"அண்ணே! ரெண்டு இட்லியும், கட்டிச் சட்னியும், சாம்பாரும் சீக்கிரம் கட்டுங்க' என்ற குரல் தமிழகத்தின் ஆங்காங்கே உள்ள இட்லிக் கடைகளில் கேட்கப்படுவதுண்டு.  ஆவி பறக்கும் இட்லியையும், கமகமக்கும் மணத்துடன் சா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:06 am

வே.சுந்தரேஸ்வரன்

"அண்ணே! ரெண்டு இட்லியும், கட்டிச் சட்னியும், சாம்பாரும் சீக்கிரம் கட்டுங்க' என்ற குரல் தமிழகத்தின் ஆங்காங்கே உள்ள இட்லிக் கடைகளில் கேட்கப்படுவதுண்டு.

 ஆவி பறக்கும் இட்லியையும், கமகமக்கும் மணத்துடன் சாம்பாரையும் பார்ப்பதே கூட அலாதியான விஷயம்தான்.

 தமிழகத்தில் மட்டும்தானா அப்படி. இல்லை, இல்லை தில்லியிலும் தென்னிந்தியர்கள் வைத்துள்ள உணவுக் கடைகளில் இதே பேச்சுதான்.

 "பையா ஏக் பிளேட் இட்லி, பஹூத் சாம்பார் தீஜியே' என்று வட இந்திய இளைஞர்களும், யுவதிகளும் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

 குறிப்பாக, மயூர் விஹார் ஃபேஸ் 1, ஃபேஸ் 2, திரிலோக்புரி, லட்சுமிநகர், கரோல் பாக், முனீர்கா, மங்கோல்புரி, சக்கூர்பூர் போன்ற இடங்களில் தமிழக மக்கள் நடத்தும் உணவுக் கடைகளாக இருந்தாலும் சரி, அல்லது ஜந்தர் மந்தரில் உள்ள தென்னிந்திய உணவுக் கடையாக இருந்தாலும் சரி சாம்பாரில் வடை, இட்லியை நனைத்து வட இந்தியர்கள் மிகவும் ரசித்துச் சாப்பிடுவதைக் காணலாம்.

 உலகின் எந்தப் பகுதிக்குச் சென்று தென்னிந்தியர்கள் குடியேறினாலும் அங்கெல்லாம் தங்களது பாரம்பரிய உணவு வகையான இட்லி, சாம்பார், தோசை, சட்னியை மறப்பதில்லை!

 வேலைக்காக தில்லிக்கு குடிபெயர்ந்த தென்னிந்திய மக்களில் சிலர் இட்லி, தோசை, உப்புமா, வடை போன்றவற்றை விற்பனை செய்யும் உணவுக் கடைகளையும் நடத்தி வருகின்றனர்.

 வட இந்தியர்களும் இட்லி, தோசையை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு, இன்றைக்குத் தில்லியில் தென்னிந்திய உணவு வகைகளுக்கு மவுசு அதிகம்.

 கரோல் பாக், கனாட்பிளேஸ் என சில இடங்களில் மட்டுமே இருந்த இந்த வகை உணவுக் கடைகள் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமின்றி வட இந்திய மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகின்றன.

 தில்லியில் தமிழக உணவு விடுதிகளில் இட்லி, சாம்பார் விற்பனை எப்படி இருக்கிறது? மயூர்விஹார் ஃபேஸ் 1, பாக்கெட் 3 மார்க்கெட்டில் கடை நடத்திவரும் பாபுலால் கூறுகிறார்:

 "30 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். தொடக்கத்தில் டீக்கடையாக இருந்தது. மக்களின் விருப்பத்தை அறிந்து வடை, தோசை, இட்லி, உப்புமா, ரவா தோசை, பன்னீர்தோசை, ஆனியன் ஊத்தப்பம், வெஜிடபிள் ஊத்தப்பம் ஆகியவை விற்கிறோம்.

 வட இந்தியர்கள் பன்னீர் தோசையை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இட்லி, சாம்பார், வடை அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. மசாலா தோசையையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். மலையாளிகள் இட்லி சாம்பாரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

 மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்வோரும் உண்டு. சாம்பாரில் சீரகம், சோம்பு, கசகசா, ஜாதிக்காய், எள், பெரிய ஏலக்காய், வெந்தயம், பட்டை, வத்தல், கடலைப் பருப்பு, பெருங்காயம் என 32 வகையான மசாலா அயிட்டங்களைச் சேர்க்கிறோம். இதனால், சீக்கிரத்தில் சாம்பார் கெட்டுப் போவதில்லை' என்றார்.

 பாண்டவாநகரில் சாலையோர உணவுக் கடை நடத்திவரும் சரவணன் கூறியதாவது:

 மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை கடை நடத்துகிறோம்.

 தென்னிந்தியர்கள் மட்டுமின்றி வட இந்தியர்களும் அதிகம் பேர் வருகின்றனர். மசாலா தோசையை விரும்பிச் சாப்பிடுகின்றனர். மற்றபடி சாம்பார்தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தது என்றார்.

 மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் ஸ்ரீதரன் மெஸ்ûஸ சேர்ந்த மூர்த்தி கூறியது:

 25 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை வட இந்தியர்கள் அதிகமாக வருகின்றனர். இட்லி, சாம்பார், மசாலா தோசை விரும்பிச் சாப்பிடுகின்றனர். அவர்களுக்குப் பிடித்தது சாம்பார்தான். எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் தமிழக உணவு வகைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறுகின்றனர் என்றார்.

 வடை, இட்லி, தோசையை தென்னிந்திய மக்களும், வட இந்திய மக்களும் விரும்பிச் சாப்பிடுவதை ஜந்தர்மந்தரில் தென்னிந்திய உணவுக் கடையிலும் காண முடிகிறது.

 இது குறித்து தில்லியைச் சேர்ந்த கல்லூரி புஷ்கர் கூறியதாவது:

 வீட்டில் சப்பாத்தி, சோலே பட்டூரே சாப்பிட்டாலும் மிகவும் பிடித்த உணவு இட்லி, சாம்பார்தான். சாம்பாரில் இட்லியை ஊறவைத்து சாப்பிடுவதே தனிச் சுவை. கூடவே சாம்பாரையும் குடிப்பது மிகவும் பிடிக்கும் என்கிறார்.

 "தில்லியைப் பொறுத்தவரை, ஒரு வகையில் வட இந்தியரையும், தென்னிந்தியரையும் இணைக்கும் உறவுப் பாலமாக இட்லியும், மசாலா தோசையும், சாம்பாரும் இருக்கின்றன' என்கின்றனர் பல தில்லிவாசிகள்.

 படங்கள்: கே.டி.ராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.