"பூங்கா வாசி'களுக்கு பிரத்யேக கவனிப்பு!
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு வழங்குவதற்குப் பிரத்யேக


தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு வழங்குவதற்குப் பிரத்யேக ஏற்பாடு உள்ளது. இதற்காக மாதத்திற்கு ரூ. 25 லட்சம் தொகை செலவிடப்படுகிறது.
தலைநகரில் புராணா கிலா கோட்டையை ஒட்டியுள்ள தேசிய உயிரியல் பூங்கா காட்டு விலங்குகள், பறவை இனங்களின் கண்காட்சிக் கூடமாகவும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் தலமாகவும் விளங்கி வருகிறது.
இப்பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை, விலங்கு இனங்கள் என சுமார் 1,600 வன உயிரினங்கள் பராமரித்து வரப்படுகின்றன.
தில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் இப்பூங்கா விலங்குகளைக் குளிர்காலத்திலும், கோடைக்காலத்திலும் பராமரிக்க உணவு முறைகளிலும், வாழிடங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் மத்திய வன, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரே பூங்கா இந்த தேசிய உயிரியல் பூங்கா என்பது குறிப்பிடத் தக்கது.
250 ஊழியர்கள்
இப்பூங்காவில் வன விலங்கு பராமரிப்புக்காக விலங்குப் பிரிவு, மருத்துவப் பிரிவு, அலுவலகப் பிரிவு என மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன.
தவிர, சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு, விலங்கு கூண்டுகளைச் சீர்செய்யும் பிரிவு, உணவு வழங்கும் பிரிவு ஆகிய இதர பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவில் நிரந்தரப் பணியாளர்கள் 80 பேர், தினக்கூலிப் பணியாளர்கள் 120 பேர், மருத்துவப் பிரிவு, மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் என சுமார் 250 பேர் பணியாற்றுகின்றனர்.
விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள், கவனிப்புகள் குறித்து, "தினமணி' செய்தியாளரிடம் பூங்காவின் வன விலங்கு மூத்த மருத்துவர் ந. பன்னீர் செல்வம் கூறியது:
பூங்கா விலங்குகளுக்குப் பாலுக்காக மட்டும் மாதம்தோறும் சுமார் ரூ. 19,000, இறைச்சிக்காக ரூ. 5.50 லட்சம், மீன் வகைகளுக்காக ரூ. 3.40 லட்சம், தானிய வகைகளுக்காக ரூ. 4.40 லட்சம் செலவிடப்படுகிறது.
மான்கள், யானைகளுக்கு வழங்கப்படும் மர இலைகளுக்காக ரூ. 2.90 லட்சம், மான்களுக்கான புல் வகைகளுக்காக ரூ. 1.50 லட்சம், கேரட், உருளைக்கிழங்கு, ரொட்டி, முட்டைகோஸ், ஆப்பிள், பழவகைகளுக்கு ரூ. 2.60 லட்சம் மற்றும் சிறு பறவைகள், மான்களுக்கு வழங்கப்படும் தானிய வகைகளுக்கு ரூ. 3.90 லட்சம் உள்பட மாதத்திற்கு ரூ. 24 லட்சத்துக்கு மேல் செலவிடப்படுகிறது.
சிங்கம், புலிக்கு 10 கிலோ மாட்டிறைச்சி
ஒவ்வொரு விலங்குக்கும் பலதரப்பட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. சிங்கம், புலிக்கு நாளொன்றுக்கு 8 முதல் 10 கிலோ மாட்டிறைச்சியும், கரடிகளுக்கு ஆப்பிள், ரொட்டி, பால் மற்றும் பழ வகைகளும் வழங்கப்படுகின்றன.
யானைகளுக்கு மரக்கிளை, புற்கள், வாழைப்பழம் மற்றும் தானியம், வெல்லம், எண்ணெய் ஆகியவை சேர்த்த சாதமும் வழங்கப்படுகின்றன.
கருவுற்ற விலங்குகளுக்கும், குட்டி ஈன்ற வழங்குகள், நோயுற்ற, வயதான விலங்குகள் ஆகியவற்றுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி தனி உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன.
தடுப்பூசியும், குடற்புழு மருந்தும்...
ஆண்டுக்கு ஒருமுறை விலங்குகளுக்கு தொற்றுநோய் தடுப்பூசி, வெறிநாய்த் தடுப்பூசி, காணைநோய் தடுப்பூசி போடப்படுகின்றன. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு நீக்கத்திற்கான மருந்தும் அளிக்கப்படுகிறது.
மாதம்தோறும் ஊட்டச்சத்து மருந்துகளும் புகட்டப்படுகின்றன. இதற்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை செலவிடப்படுகிறது.
உயிரின வகை அதிகரிப்பு
பூங்காவில் 116 வகை உயிரினங்கள் இருந்தன. தற்போது, இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. அவற்றின் மொத்த எண்ணிக்கை 1,500-ல் இருந்து 1600-ஆக அதிகரித்துள்ளது.
விலங்குகள் பரிவர்த்தனை மூலமும், இனப்பெருக்கத்தின் மூலமும் இந்த வளர்ச்சி அடையப் பெற்றுள்ளது என்று பன்னீர்செல்வம் கூறினார்.
அழியும் உயிரினங்கள் பாதுகாப்பு
தேசிய உயிரியல் பூங்காவில் அழியும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்கு, காண்டா மிருகம், ஒட்டகச் சிவிங்கி, மலையாடு, ஆசியச் சிங்கம், வெள்ளைப்புலி, புலி, சிறுத்தை மற்றும் பல்வேறு விலங்குகள் இனவிருத்தி செய்யப்பட்டு, அழிவில் இருந்து காப்பாற்றப்படுகின்றன.
ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பறவை, விலங்குகள், வன விலங்குச் சட்ட 1-வது பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ள விலைமதிக்க முடியாத உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு, இனவிருத்தி செய்யப்பட்டு, பிற இடங்களில் உள்ள பூங்காக்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...