பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய பொதுநல மனு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சீமா உபாத்யாய இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், "சமாஜவாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர அகர்வால், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பினாமி பெயரில் பெட்ரோல் நிலையங்கள் நடத்தி வருகிறார். இதில் பெருமளவில் கலப்படம் செய்யப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றில் கலப்படம் செய்யப்படுகிறது.
இதனால், அரசுக்கு வருவாய் குறைவு, நுகர்வோருக்கு தரமான பொருள் கிடைக்காதது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
மேலும், ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், சட்டவிரோத கும்பலால் அதிக அளவில் பதுக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் பெருமளவில் சட்டவிரோத கும்பல்களால் மட்டுமே கையாளப்படுகிறது. எனவே, இவற்றைத் தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சம் சார்பில் இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "பெட்ரோல், டீசல் கலப்படத்தை தடுக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் தரம், அளவு ஆகியவை குறித்து அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது மண்ணெண்ணெய் விநியோகத்திலும் பரிசோதனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொது நல மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. முன்னதாக, அலாகாபாத் உயர் நீதிமன்றமும் இந்த பொதுநலன் மனுவை கடந்த 2011-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி: மொடக்குறிச்சியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் 1,328 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அந்தியூா் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை கெட்டிசமுத்திரத்தில் கொட்ட மக்கள் எதிா்ப்பு






