பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமராக 1996-ல் முதல் முறையாகப் பதவி ஏற்றவர் வாஜ்பாய். 1998-ல் இரண்டாவது, 1999-இல் மூன்றாவது முறையாகவும் பதவி ஏற்ற போது அவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் இடம்பெற்றன.
பொக்ரான் அணு சோதனை: வாஜ்பாய் ஆட்சியின் முதல் சாதனையாக 1998, மே மாதத்தில் இந்தியா நடத்திய பொக்ரான் அணு சோதனை கருதப்படுகிறது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது எனலாம். இரண்டாவது அணு சோதனையான இதை 24 வருடங்களுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி - லாகூர் பேருந்து: காஷ்மீர் பிரச்சினையை முடிக்க வேண்டி வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த முயன்றார். தில்லி-லாகூருக்கு இடையே 1999-இல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார் வாஜ்பாய்.
கார்கில் போர்: அதன் பிறகு தீவிரவாதிகளுடன் சீருடை அணியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதால் இருநாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. இதைச் சமாளிக்க 1999-ஆம் ஆணஅடு "ஆப்ரஷேன் விஜய்' எனும் போர் நடவடிக்கை எடுத்து அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்தப் போர் மூன்று மாதங்கள் நீடித்ததில் இறுதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இதில், 300 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
விமானக் கடத்தல்: 1999-இல் நேபாலின் காட்மண்டுவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட 'இந்தியன் ஐசி 814' ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டது. இதைச் செய்த தீவிரவாதிகள் விமானத்தை ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் இறக்கினர். அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர். இதற்கு ஈடாக காஷ்மீரின் சிறையில் இருந்த தீவிரவாதியான மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.
3 புதிய மாநிலங்கள்: 2000-ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இவை முறையே உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. இதனால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 28 ஆக உயர்ந்தது.
முஷாரப்புடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுடன் நிலவிய பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வாஜ்பாய் முயன்றார். அந்நாட்டின் அதிபர் பர்வேஜ் முஷாரப்புடன் 2001, ஜூலை 1-இல் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முறை முஷாரப்புடன் ஒருவராக வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் ஒப்பந்தம் ஏற்படாமல் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தாக்குதல்: தில்லியின் நாடாளுமன்றக் கட்டடம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2001, டிசம்பர் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். மத்திய பாதுகாப்பு வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவானது. இதற்காக இந்திய ராணுவப் படைகள் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநில எல்லைப் பகுதிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த நிலை தொடர்ந்து சுமார் இரு வருடங்கள் நீடித்தன.
காலுசோக் தாக்குதல்: இதை அடுத்து மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காலுசோக் எனும் இடத்தில் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இமாச்சல பிரதேச பேருந்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு அருகிலுள்ள ராணுவக் குடியிருப்பில் புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குழந்தை, சிறுவர் மற்றும் பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு மீண்டும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகி எல்லைகளில் பதற்றமான சூழல் நீடித்தது.
குஜராத் கலவரம்: 2002-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்படவில்லை என வாஜ்பாய் அரசு மீது கடுமையான புகார் எழுந்தது. சில வருடங்களுக்குப் பிறகு இது குறித்து வாஜ்பாய் பேசுகையில், குஜராத் கலவரத்தில் தவறு நிகழ்ந்ததாக ஒப்புக் கொண்டார்.