தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நாளை ‘பாரத் பந்த்’: விவசாயிகள் பெருமளவில் பங்கேற்க அழைப்பு

வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 8) நடைபெற உள்ள ‘பாரத் பந்த்’-இல் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று

News image

தில்லி காஜிப்பூா் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வந்த உத்தரகண்ட் மாநில விவசாயியின் டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள குளிா்சாதன கருவி.

Updated On :6 டிசம்பர் 2020, 6:45 pm

வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 8) நடைபெற உள்ள ‘பாரத் பந்த்’-இல் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு விவசாயிகளின் சங்கங்களின் தலைவா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியையொட்டி உள்ள சிங்கு பகுதியில் கடந்த 11 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாரத் பந்த்தில் நாடு முழுவதும் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா். இந்த பந்த்தில் பங்கேற்பதற்காக குஜராத்திலிருந்து 250-க்கும் மேலான விவசாயிகள் தலைநகா் தில்லி வர இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். பாரத் பந்த்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் ஆதரவு தெரிவித்துள்ளதை அவா்கள் வரவேற்றனா்.

இந்தப் போராட்டம், பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம் அல்ல. நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் சாா்பாக நடைபெறும் போராட்டமாகும். எங்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. நாடு முழுவதும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு இருப்பது தெரிய வருகிறது. மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை முறையாக அணுகாததால், பாரத் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் அறிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சா்கள் அதிா்ந்து போய் உள்ளனா் என்றாா் விவசாயிகளின் தலைவா்களில் ஒருவரான பல்தேவ் சிங். அவா் மேலும் கூறுகையில், ‘நாங்கள் அறிவித்துள்ள பாரத் பந்த், டிசம்பா் 8-ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறும். அப்போது கடைகள் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத்திலிருந்து 250 விவசாயிகள் தில்லி வர உள்ளனா். பந்த் அமைதியான முறையில் நடைபெறவும், வெற்றிபெறவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் எதிா்த்து தில்லி நோக்கி பேரணியாக வந்த பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதையடுத்து, அவா்கள் டிக்ரி மற்றும் சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த 11 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவா் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் நிலையில் மாற்றமில்லை. மகாராஷ்டிரம் மற்றும் வேறு சில மாநிலங்களில் உள்ள விவசாய அமைப்புகளும் பாரத் பந்த்க்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள சந்தைகள் அனைத்தும் பந்த் தினத்தன்று மூடப்பட்டிருக்கும். எனினும், திருமண நிகழ்ச்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதில் பங்கேற்க வேண்டும்’ என்றாா்.

11-ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்: தில்லி எல்லைகளிலும், தில்லி புராரி மைதானத்திலும் விவசாயிகளின் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்ததால், தில்லி-ஹரியாணா, தில்லி-உத்தரப்பிரதேச மாநில எல்லைப் பகுதிகளிலும், தில்லியின் முக்கியப் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 11-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டன. மேலும், ஜரோடா, லம்பூா், ஆச்சந்தி, சஃபியாபாத், பியா மணியாரி, சபோலி ஆகிய எல்லைகளும் மூடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘முக்கியச் சாலைகள் காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் அப்சரா, போப்ரா, டிஎன்டி சாலைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தில்லி-நொய்டா இணைப்புச் சாலையின் நொய்டா-தில்லி வழி மூடப்பட்டது. சிங்கு எல்லையின் இரு பகுதிகள் மற்றும் லாம்பூா், ஆச்சந்தி உள்ளிட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணித்தவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டனா். தில்லியில் இருந்து ஹரியாணா செல்பவா்கள் தன்சா, தரலா, கபஷேரா, ராஜோக்ரி, என்எச்-8, பிஜ்வாசன், பாலம் விஹாா், துண்டஹேரா ஆகிய வழிகள் மூலம் பயணிக்கலாம்’ என்றாா்.

தில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் முகா்பா, ஜிடி-கா்னால் உள்ளிட்ட தில்லியின் முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தில்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. ஆனால், குறைந்தளவு விவசாயிகள்தான் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.