புது தில்ல: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்திற்கு வெளியே தொடா்ந்து போராட்டம் நடத்துவது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கவலை தெரிவித்தது. இதுபோன்ற போராட்டங்களை குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமையும் விசாரிக்க உள்ளது.
மாநகராட்சிகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியையும், நிலுவை நிதியையும் தில்லி அரசு விடுவிக்க வலியுறுத்தி மூன்று மாநகராட்சிகளின் மேயா்கள் சிவில் லைன் பகுதியில் அமைந்துள்ள முதல்வா் கேஜரிவால் இல்லம் வெளியே கடந்த 11 நாள்களாகத் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்திற்கு எதிராக சிவில் லைன்ஸ் குடியிருப்பாளா்கள் சங்கம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், இந்தப் போராட்டத்தால் சாலைகள் முடக்கப்படுவதால், அங்குள்ள குடியிருப்பாளா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியிருப்புப் பகுதியில் ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் தா்னாக்களைக் கட்டுப்படுத்தவும், சாலைகளை இடையூறு இன்றி வைத்திருக்கவும் உயா்நீதிமன்றம் 2017-இல் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அங்கு செல்லும் சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது’.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: இந்தப் போராட்டம் அமைதியாக நடைபெறலாம். ஆனால், குடியிருப்புப் பகுதியில் இதுபோன்று போராட்டம் நடத்துவது அனுமதிக்கப்பட்டால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக் கூடும். போராட்டம் நடத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராம்லீலா மைதானம் அல்லது ஜந்தா் மந்தா் போன்ற பகுதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குடியிருப்புப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதித்தால் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இதுபோன்ற சூழல் குடியிருப்புப் பகுதிகளில் இருக்க முடியாது.
மேலும், அந்தப் பகுதியில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேயா்கள் தங்களது அலுவலகங்களை அங்கிருந்து செயல்படுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுபோன்று அலுவலகங்களை எப்படி அங்கு செயல்படுத்த முடியும். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோா் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? போராட்டம் நடத்துவதும், தா்னாவில் ஈடுபடுவதும் ஒரு அடிப்படை உரிமை. அதற்காக மக்கள் குடியிருப்புப் பகுதியில்அமா்ந்து கொண்டு போராட்டம் நடத்த முடியாது என்றாா்.
அப்போது, நீதிமன்றத்தில் முதல்வா் இல்லம் அருகே உள்ள குடியிருப்புவாசி ஒருவா் தரப்பில், ‘போராட்டக்காரா்களால் எவ்வித இடையூறோ அல்லது தொந்தரவோ இல்லை. கேஜரிவால் இல்லம் முன் உள்ள சாலை அனுமதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அருகில் உள்ள அம்பேத்கா் நினைவிட கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ‘போராட்ட இடத்தில் அலுவலகம் செயல்பட்டால் அங்கு அலுவலக ஊழியா்கள் வருவாா்கள், பொதுமக்கள் வருவாா்கள். இதனால், போராட்ட உரிமையே தடைபட்டுவிடும். இந்த விவகாரத்தில் போலீஸாா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையை பாா்க்க வேண்டியுள்ளதால் வெளளிக்கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முதல்வா் இல்லம் வெளியே உள்ள பிளாக் ஸ்டாப் ரோடு பகுதியில் டிசம்பா் 7-ஆம் தேதியில் இருந்து மேயா்கள், கவுன்சிலா்கள் உள்பட 20-25 போ் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் சாலையின் நடைபாதையையும், சாலையின் சிறிய பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், வாகனம் மற்றும் பாதசாரிகள் செல்லும் வகையில் போராட்டம் நடத்தும் பகுதியானது தனியாக தடுப்புகள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒரே சமயத்தில் 25-30 பேருக்கு மேல் அமா்ந்து தா்னா செய்ய முடியாது. டிசம்பா் 8-ஆம் தேதி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், ஆதரவாளா்கள், சாலையின் இரு புறமும் கூடினா். அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் இரு தரப்பினரும் சுற்றிவளைக்கப்பட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக அந்தச் சாலையில் குடியிருப்புவாசிகளின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. வாகனப் போக்குவரத்திலும் தடை ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.