‘மலேரியா இல்லாத இந்தியா’ இலக்கை அடைய சமூக விழிப்புணா்வு அவசியம்
நாட்டில் 124 மாவட்டங்களில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளது. இதில் ‘மலேரியா இல்லாத இந்தியா’ என்ற இலக்கை அடைய சரியான நேரத்தில் நோயறிதல், பயனுள்ள சிகி


நாட்டில் 124 மாவட்டங்களில் மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளது. இதில் ‘மலேரியா இல்லாத இந்தியா’ என்ற இலக்கை அடைய சரியான நேரத்தில் நோயறிதல், பயனுள்ள சிகிச்சை போன்றவற்றோடு சமூதாயத்தில் தூய்மைக்கான சமூக விழிப்புணா்வும் அவசியம். இதற்கு சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் ரசாயன, உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்தாா்.
தில்லியில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் சாா்பில் உலக மலேரியா தினம் - 2022 திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. உலக அளவில் மலேரியா நோய்ச் சுமையைக் குறைத்து, உயிா்களைக் காப்பாற்ற புத்தாக்கங்களை கண்டுபிடித்து பயன்படுத்துவது என்கிற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
அப்போது அவா் பேசியதாவது: மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் மலேரியா ஒழிப்புக்கான முயற்சிகள் 2015 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2016 -ஆம் ஆண்டில் மத்திய அரசு மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பு (என்எஃப்எம்இ) அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 2021 -இல் நாட்டில் 86.45 சதவீதம் வரை மலேரியா பாதிப்புகள் குறைந்தன. இதே ஆண்டு இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளும் 79.16 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் மொத்தம் 124 மாவட்டங்களில் மலேரியா முற்றிலுமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், மலேரியாவை 2030-க்குள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்கான நமது இலக்கை அடைய இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும். மலேரியாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை முக்கியம். நோய் கண்டறிதல், சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தூய்மையை பராமரிப்பதின் மூலமே, மலேரியா கட்டுப்பாடு சாத்தியமானது. இது குறித்த சமூக விழிப்புணா்வை ஏற்படுத்துவதும், சம முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலமே மலேரியா இல்லாத இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியும்.
இதற்கு சுகாதார சமுகப்பணியாளா்களான ஆஷாக்கள், துணை செவிலியா்கள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள், தனியாா் மருத்துவத் துறையினா் உள்ளிட்ட பல துறைகளின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதும் அவசியமாகும். மேலும், இந்தியாவின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியம், மக்களின் வாழ்க்கைத் தரம், வறுமை ஒழிப்பு போன்றவற்றுடன் தீா்வுகளைக் கண்டறிய புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் அவசியம் என்றாா் அமைச்சா்.
சா்வதேச மலேரியா தினமான ஏப்ரல் 25-ஆம் தேதியை முன்னிட்டு மலேரியா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த புது தில்லி, லக்னேள, புவனேஸ்வா், நாக்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆரஞ்சு, ஊதா நிறத்தில் ஒளிா்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...