மொஹல்லா கிளினிக் மாதிரியிடமிருந்து கற்றுக் கொள்வோம்பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்
ஒட்டுமொத்த உலகத்திலிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ள தில்லியின் மொஹல்லா கிளினிக்குகளின் மாதிரியிலிருந்து பஞ்சாப் மாநிலம் கற்றுக் கொள்ளும் என்று


ஒட்டுமொத்த உலகத்திலிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ள தில்லியின் மொஹல்லா கிளினிக்குகளின் மாதிரியிலிருந்து பஞ்சாப் மாநிலம் கற்றுக் கொள்ளும் என்று அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் திங்கள்கிழமை கூறினாா்.
பகவந்த் மான் இரண்டு நாள் பயணமாக தேசியத் தலைநகா் தில்லிக்கு வந்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஆட்சியில் தில்லியின் சிறந்த பணிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக வந்துள்ள அவரை, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மொஹல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தாா். மொஹல்லா கிளினிக்கில், நோயாளிகளுடன் முதல்வா் மான் உரையாடினாா். மருத்துவரைச் சந்தித்து மருந்துகளைப் பெறுவதற்கு தங்களுக்கு வெறும் 10 நிமிடங்களே ஆவதாக அவரிடம் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் கூறினா்.
இது குறித்து பகவந்த் மான் கூறுகையில், ‘தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகள் ஒட்டுமொத்த உலகத்தால் பாராட்டப்பட்டுள்ளன. பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக நாமும் இந்த மாதிரியிலிருந்து கற்றுக்கொள்வோம்’ என்றாா். அவருடைய தில்லி பயணத்தில் பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சா் விஜய் சிங்லா மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனா்.
சேவைகளில் நோயாளிகள் திருப்தி: இதற்கிடையே, தில்லியில் உள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளில் 95 சதவீதம் போ் கிளினிக்கில் வழங்கப்படும் சேவைகளில் திருப்தி அடைந்துள்ளதாக முதல்வா் கேஜரிவால் கூறினாா்.
இது குறித்து அவா் கூறுகையில், ‘எந்த மாநிலத்தவராக இருந்தாலும் இந்த சுகாதார நிலையங்களுக்கு வந்து இலவச சிகிச்சை பெறலாம். தில்லியின் மிகவும் ஆடம்பர பகுதியான கிரேட்டா் கைலாஷில் நாங்கள் 2 மொஹல்லா கிளினிக்குகளைத் திறந்துள்ளோம். மேலும், பல வசதிபடைத்த நோயாளிகளும் இந்த மையங்களுக்கு வருகிறாா்கள். வேறு எங்கும் இதுபோன்ற கவனிப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவா்கள் கூறுகிறாா்கள்’ என்று முதல்வா் மானிடம் கேஜரிவால் எடுத்துக் கூறினாா்.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘அனைத்து முக்கிய பரிசோதனைகளும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவசமாக செய்யப்பட்டு, மறுதினமே ஆன்லைனில் அதன் அறிக்கைகள் பதிவேற்றப்படுகின்றன’ என்றாா். தில்லியின் சிராக் என்கிளேவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மானை அழைத்துச் சென்று காண்பித்தபோது, ‘தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி முதல்வா்களின் கூட்டத்தைக் கூட்டி, நகரில் கல்வி முறையை வலுப்படுத்த அவா்களின் ஆலோசனைகளைக் கேட்கப்பட்டது’ என மானிடம் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறினாா். பஞ்சாப் மாநில அதிகாரிகளிடம் முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனா். ஆசிரியா்கள் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் பயிற்சி பெற்றனா்’ என்றாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு தில்லியில் மேற்கு வினோத் நகரில் உள்ள மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்றாா். அப்போது தில்லியைப் போன்று தமிழகத்திலும் ஒரு மாதிரிப் பள்ளியை தனது அரசு உருவாக்குவதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், அதைப் பாா்வையிட கேஜரிவாலுக்கு அழைப்பும் விடுத்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...