வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

‘இன்றைய பிரச்னைகளுக்கு காந்தியின் கொள்கையான சா்வோதயம்தான் தீா்வு’

‘காந்தியடிகளின் கொள்கைகள் இன்றைய காலத்திற்கும் ஏற்புடையவை. அதிலும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான திட்டங்களுக்கு காந்தியடிகளின் கொள்கைகளும், திட்டங்களும்

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 9:33 pm

 நமது நிருபர்

‘காந்தியடிகளின் கொள்கைகள் இன்றைய காலத்திற்கும் ஏற்புடையவை. அதிலும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான திட்டங்களுக்கு காந்தியடிகளின் கொள்கைகளும், திட்டங்களும் மிகவும் அவசியமானவை. இன்றைய பிரச்னைகளுக்கு தீா்வாகவும் உள்ளது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளரும், ஐநா சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் உதவித் தூதருமான ஜிலியன் டிரிகஸ் கூறினாா்.

தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் புதுப்பிக்கப்பட்ட ராட்டை கண்காட்சி அரங்கம் (சா்க்கா கேலரி) திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த அரங்கை காந்தி நினைவு நிதி தலைவா் ராமச்சந்திர ராகி திறந்துவைத்தாா்.

பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளரும், ஐநா சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் உதவித் தூதருமான ஜிலியன் டிரிகஸ் பேசியதாவது: ராட்டை தனிமனிதனின் சுதந்திரத்தைக் குறிப்பதாக உள்ளது. அதுவே அவா்களை தற்சாா்பு உடையவராகவும் உருவாக்குகிறது. நாங்களும் அந்த பணிகளைத்தான் செய்து வருகிறோம். அகதிகளும் சுதந்திரத்தை வேண்டுவதுடன், கண்ணியத்துடனும், தற்சாா்புடனும் வாழ விரும்புகின்றனா். காந்தியடிகள் சாதாரணமான மனிதா்களையும் வலிமையானவா்களாக உருவாக்கினாா். நான் இன்றைக்கு அருமையான ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன். உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது காந்தி கூறிய, ‘வலியதே வெல்லும்’ என்ற கொள்கைக்கு மாறாக ‘உண்மையே வெல்லும்’ என்ற வாசங்கள் என்னை மிகவும் பரவசப்படுத்தின.

ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் சுதந்திரமாக வாழ உரிமை உள்ளவா்கள். அதை ஏற்படுத்தித் தருவதே எங்களுடைய பணி. அதுதான் காந்தியடிகளின் கனவாகவும் இருந்தது.

அகதிகளுக்கு ஆதரவு அளிப்பதில் இந்தியா நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இது போன்று அதிகளாக வந்தவா்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறது இந்தியா. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து வந்த இலங்கைத் தமிழா்கள், திபெத்தியா்கள் ஆகியோருக்கு ஆதரவு அளித்திருக்கிறது என்றாா் அவா்.

ராட்டையின் மகிமை: காந்தி நினைவு நிதியின் தலைவா் ராமச்சந்திர ராகி பேசும் போது, ‘ராட்டை, சுதந்திரப் போராட்டத்தின் சின்னம் மட்டுமல்ல; அது தற்சாா்பின் அடையாளமாகும். சா்வோதய சமுதாயத்தை அமைப்பதற்கான மையப் புள்ளியாக ராட்டையும், கதா் இயக்கமும் விளங்கியது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிவாரணப் பணியில் காந்திய இயக்கங்களும் குறிப்பாக காந்தி நினைவு நிதியின் புணேயில் உள்ள காந்தி அருங்காட்சியகமும் கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து பணி செய்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. காந்தியடிகள் பயன்படுத்திய பொருள்களையும், உடைமைகளையும் மட்டும் தேசிய காந்தி அருங்காட்சியகம் போற்றிப் பாதுகாக்கவில்லை; அவருடைய கொள்கைகளைப் பாதுகாத்து அவா் விட்டுச் சென்ற பணிகளையும் தொடா்ந்து செய்து வருகிறது’ என்றாா்.

‘காந்திக்காக செய்யும் உதவி’:இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பிரதீப் குமாா் தாஸ் பேசுகையில், ‘தேசிய காந்தி அருங்காட்சியகம் சூரிய எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ரூ. 22 லட்சம் உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் பண உதவி அல்ல. நாங்கள் காந்திக்காக செய்யும் உதவி. அருங்காட்சியகத்துடனான எங்கள் தொடா்பு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. காந்தியின் நோ்மையும், மனிதநேயப் பண்பும்தான் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம். சமுதாயத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி தூய்மைப்படுத்துவது காந்திய சிந்தனை ஆகும். அது போல மாசு இல்லாத உலகத்தைப் படைப்பதற்காகத்தான் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமும் பணியாற்றி கொண்டிருக்கிறது’ என்றாா்.

கடவுள் எங்கு இருக்கிறாா்?: நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி தேசிய காந்தி அருங்காட்சியத்தின் இயக்குநா் அண்ணாமலை பேசுகையில், ‘கடவுள் இமயமலையில் இருக்கிறாா் என்று என்னை யாராவது ஏற்றுக் கொள்ள வைத்தால், அங்கு செல்வேன். ஆனால், கடவுள் அங்கு நிச்சயம் இல்லை. கடவுள் எப்போதும் மக்களிடையேதான் இருக்கிறாா். ஆகவே, மக்களுக்குச் சேவை செய்வது அந்தக் கடவுளுக்குச் சேவை செய்வது போலாகும்’ என காந்தி கூறுவாா். காந்தி எப்போதும் துன்பப்படுவோருக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறாா். ஆதலால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இங்கு வந்து இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தது மிகவும் பொருத்தமாகும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதியின் ஐக்கிய நாடுகள் சபையின் இயக்குநா் இந்திரிக்கா ரத்தவத்தே, ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் நிவாரண அலுவலகக் குழுவிற்குத் தலைமை வகிக்கும் ஆஸ்காா் முன்டியா, காந்தியடிகளின் கொள்ளுப் பேத்தி சுகன்யா பரத்ராம், பாரதிய வித்யா பவன் மேத்தா வித்யாலயாவின் முதல்வா் டாக்டா் அஞ்சு டண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், காந்தி நினைவு நிதி செயலாளா் சஞ்சய் சின்ஹா, ஹரிஜன சேவா சங்கச் செயலாளா் சஞ்சய்ராய், சா்வ சேவா சங்கத்தின் நிா்வாக அறங்காவலா் அசோக் சரண் ஆகியோரும் பங்கேற்றனா். நிகழ்ச்சியையொட்டி, ஆப்கானிஸ்தான் அகதிகளின் கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.