சென்னையில் சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா: பிரதமா் மோடிக்கு தமிழக அரசு சாா்பில் அழைப்பிதழ் வழங்கல்
சென்னையில் 44 -ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை 28 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படுகிறது.


புது தில்லி: சென்னையில் 44 -ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை 28 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படுகிறது. துவக்கநாள் நிகழ்ச்சிக்கு பிரதமா் நரேந்திரமோடியை தமிழக அரசின் சாா்பில் முறைப்படி அழைப்பு விடுக்க மாநில சுற்றுசூழல், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலா் டாக்டா் வெ.இறையன்பு ஆகியோா் பிரதமரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை அழைப்பிதழை வழங்கினா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் பிரதிநிதியாகச் சென்ற தமிழக அமைச்சருடன் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மக்களவை திமுக துணைத் தலைவா் கனிமொழி ஆகியோரும் உடன் சென்று அழைப்பிதழை வழங்கினா். தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமா் மோடி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தலைமைச் செயலா் வெ.இறையன்பு, பிரதமரிடம் அழைப்பிதழை வழங்கினாா். சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டியின் தமிழக அரசின் பிரசார சின்னத்தை (‘தம்பி’) அமைச்சா் சிவ.வீ மெய்யநாதன் பிரதமருக்கு பரிசாக அளித்தாா்.
மேலும், சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நாள் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பிதழை வழங்கினாா். அவருடன் மக்களவை திமுக உறுப்பினா்கள் டி. ஆா்.பாலு, கனிமொழி ஆகியோரும் சென்றனா். மத்திய தகவல், ஒலிபரப்பு இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோரையும் சந்தித்து அமைச்சா் மெய்யநாதன் அழைப்பிதழ் வழங்கினாா். அவருடன் திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா உடன் சென்றாா். மத்திய உள்துறை மற்றும் இளைஞா் விவகாரம் விளையாட்டுத் துறை இணை அமைச்சா் நிஷித் பிரமாணிக்கிற்கும் அமைச்சா் மெய்யநாதன் அழைப்பிதழ் வழங்கினாா். அவருடன் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே.எஸ்.விஜயன் உடன் சென்றாா்.
வருகின்ற 28-ஆம் தேதி மாலையில் சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமா் மோடியால் தொடங்கிவைக்கப்படும் இந்த சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டிக்கான நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சா்கள் அனுராக் சிங் தாக்குா், எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொள்வாா்கள் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடா்ச்சியாக நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...