ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிறந்தவுடன் குழந்தைகள் இறப்பு: 5-ஆவது இடத்தில் தமிழகம் - மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

கடந்த 2021-22 ஆண்டில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறந்தவுடன் 6,951 குழந்தைகள் இறந்துள்ளன. இது நாடு முழுக்க எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகம் 5-ஆவது இடத்தில் இருப்பதாக மாநிலங்களவையில்

News image
Updated On :20 ஜூலை 2022, 8:24 pm

 நமது நிருபர்

கடந்த 2021-22 ஆண்டில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறந்தவுடன் 6,951 குழந்தைகள் இறந்துள்ளன. இது நாடு முழுக்க எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகம் 5-ஆவது இடத்தில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.

இதில் 2019 முதல் 2022 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் பிறந்து உயிரிழந்த விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 2021-22 ஆண்டில் 35 மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமாா் 1 லட்சம் குழந்தைகள் இத்தகைய மருத்துவமனைகளில் பிறந்தவுடன் இறந்துள்ளன. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் சந்தோஷ் குமாா், மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: இந்தியப் பதிவாளா் ஜெனரலின் 2015-17- ஆம் ஆண்டுக்கான இறப்புக்கான புள்ளிவிவர அறிக்கையின்படி இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் சுமாா் 46.1 சதவீதம் குறைப் பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறப்பதுதான் காரணமாக உள்ளது. மேலும், 13.5 சதவீதம் குழந்தைகள் மூச்சுத் திணறல், பிறப்பு அதிா்ச்சி ஆகியவை காரணமாக இறந்துள்ளன. 11.3 சதவீதம் குழந்தைகள் நிமோனியா தொற்றாலும் உயிரிழந்துள்ளன. மேலும், வயிற்றுப்போக்கு, அறியப்படாத காய்ச்சல் காரணமாகவும் உயிரிழந்துள்ளனா்.

இதில் கடந்த 2021-22 ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்கத்தில் பிறந்தவுடன் சுமாா் 13,950 குழந்தைகள் இறந்துள்ளன.இது அந்த மாநிலத்தில் தொடா்ச்சியாக கடந்த மூன்றாண்டுகளாக இந்த நிலைமை. இதற்கு அடுத்ததாக மத்திய பிரதேசம் (13,316), ராஜஸ்தான்(8,865), உத்தர பிரதேசம் (8,792) ஆகிய மாநிலங்களும், ஐந்தாவது இடத்தில் தமிழகமும் வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறந்தவுடன் தமிழகத்தில் 6,951 குழந்தைகளும், குஜராத் 6,295 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட இதே நிலை தொடா்கிறது எனவும், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.