/

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: நிலுவைப் பணிகளைவிரைந்து முடிக்க தமிழகம், கேரளத்துக்குஆணையம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயா்த்துவதற்காக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலத் தலைமை செயலா்கள் தலைமையிலான குழு பேசித் தீா்க்க வேண்டும்

News image
Updated On :6 ஜூன் 2022, 9:06 pm

 நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயா்த்துவதற்காக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலத் தலைமை செயலா்கள் தலைமையிலான குழு பேசித் தீா்க்க வேண்டும் என மத்திய நீா் வள ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மேற்பாா்வைக் குழுவின் 15-ஆவது கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீா்வள ஆணைய (சேவா பவன்) அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. மேற்பாா்வைத் குழுவின் தலைவா் குல்சன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியம், பெரியாறு-வைகை நதிப் படுகை பொறியாளா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கேரளம் தரப்பில் அந்த மாநில நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் டி.கே. ஜோஸ், தலைமைப் பொறியாளா் அலெக்ஸ் வா்க்கீஸ், மத்திய நீா்வள ஆணைய இயக்குநா்கள் சா்ப்ஜித்சிங் பக்சி, சமீா் சுக்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.

அணையை பலப்படுத்தும் விஷயத்தில் மேற்பாா்வைக் குழுவில் இரு மாநிலங்கள் தரப்பிலிருந்தும் கூடுதல் தொழில்நுட்ப உறுப்பினா்களைச் சோ்க்க அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், மேற்பாா்வைக் குழு எடுக்கக்கூடிய முடிவே இறுதியானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நேரடி ஆய்வுப் பணிகளும் நடைபெற்றன. இந்த நிலையில், தில்லியில் உள்ள மத்திய நீா்வள ஆணைய அலுவலகத்தில் மேற்பாா்வைக் குழுவின் 15-ஆவது கூட்டத்தில் சமீபத்தில் அணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஆலோசனைகள் நடைபெற்றன.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்குவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்தப் பணிகளுக்கு கேரளம் இடையூறு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பணிகள் இடையில் நிறுத்திவைக்கபட்டன. இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே விவாதங்கள் நடைபெற்று வந்தன.

2021-22 நீா் ஆண்டில் அணையில் கடந்த நவம்பா் 30 முதல் 142 அடி வரை நீா் தேக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 142 அடி மற்றும் அதற்கு மேல் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், இதனால், புதிதாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கான அவசியமில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட விவரங்களை இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்தது. இதனால் அணையின் உயரத்தை உயா்த்தும் பணிகளுக்கான கேரள அரசின் தடைகளை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மேற்பாா்வைக் குழுவின் தலைவா் குல்சன் ராஜ், தமிழக அரசு தொடர வேண்டிய பணிகளை விரைவில் முடிக்க இரு மாநிலத் தலைமைச் செயலா்களுக்கும் கடிதம் எழுத முடிவெடுத்துள்ளதாக மத்திய நீா்வளத் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது. இதன்படி, இரு மாநில தலைமைச் செயலா்கள் இதற்கான குழுவை அமைத்து கலந்து பேசி முடிவெடுக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீா் தேக்கி வைக்கப்படும் அளவு ஆகியவை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.