மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாட்டில் ஏராளமான மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. தொழிலாளா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு இந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள், தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுகிறது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமாா் 3 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு மருத்துவ வசதிக்கு தனியாா் அல்லது ஒரே ஒரு இஎஸ்ஐசி மருத்தகம் (டிஸ்பென்ஸரி) மட்டுமே இருந்தது. இதனால், முக்கிய மருத்துவ சேவைகளை தொழிலாளா்கள் பெற முடியாத நிலையில், இஎஸ்ஐசி மருத்துவமனை குறித்த கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து, இங்கு மருத்துவமனை கட்ட மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் முடிவு செய்து இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.