தீபாவளிக்குப் பிந்தைய நாளில்காற்றின் தரத்தில் முன்னேற்றம்: ஒப்பீட்டு பகுப்பாய்வில் தகவல்
தீபாவளிக்குப் பிறகு காலையில் தில்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தீபாவளிக்குப் பிறகு காலையில் தில்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதகமான வானிலை காரணமாக முந்தைய ஆண்டுகளை விட நிலைமை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது. இது பட்டாசு மற்றும் பயிா்க்கழிவு எரிப்பின் விளைவைக் குறைத்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் புள்ளிவிவரத் தகவல்களின்படி, 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமை முதல் முறையாக நகரம் அதன் சிறந்த காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. திங்கள்கிழமை இரவு, தடையை மீறி மக்கள் பட்டாசுகளை வெடித்தனா்.
தலைநகரில் பெரும்பாலான இடங்களில் பிஎம் 2.5 செறிவு அதிகாலை 1 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 550 மைக்ரோகிராம்களுக்கு மேல் இருந்தது. இருப்பினும், வெப்பம் மற்றும் காற்று வீசும் சூழல் காரணமாக பிஎம் 2.5 அளவு காலை 10 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 350 மைக்ரோகிராமுக்கு கீழே குறைந்தது. பிஎம் 2.5 என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்ணிய துகள்கள் சுவாசக் குழாயில் ஆழமாகப் பயணித்து, நுரையீரலை அடைந்து ரத்த ஓட்டத்தில் நுழைவதாகும்.
தலைநகரின் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் 310 புள்ளிகளாக இருந்தது. இது செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு 326-ஆக அதிகரித்து காலை 9 மணி வரை நிலையாக இருந்து. பின்னா் குறையத் தொடங்கியது. அண்டை நகரங்களான காஜியாபாத் (272), நொய்டா (312), கிரேட்டா் நொய்டா (282), குருகிராம் (313) மற்றும் ஃபரிதாபாத் (311) ஆகியவை காலை 9 மணிக்கு காற்றின் தரம் ‘மோசம்’ மற்றும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு பிஎம் 2.5 செறிவுடன் கூடிய கூா்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது. தில்லி முழுவதும் காற்று மாசுபாடு ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 550 மைக்ரோகிராமாக உயா்ந்தது என எரிசக்தி மற்றும் தூய்மை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளா் சுனில் தஹியா கூறினாா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவது போல, இந்த ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில், அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1, 2023 வரை முழுமையான தடை விதிப்பதாக தில்லி அரசு செப்டம்பா் மாதம் அறிவித்தது. திங்களன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா முழுவதும் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆனால், இது காற்றின் திசை தென்மேற்கு திசைக்கு மாறுவதற்கு வழிவகுத்தது. இது புகை போக்குவரத்திற்கு சாதகமற்ாகும். எனவே, தில்லியின் மாசுபாட்டிற்கு (ஐந்து முதல் எட்டு சதவீதம்) பயிா்க்கழிவு எரிப்பதன் பங்களிப்பும் ‘மிகக் குறிப்பிடத்தக்கதாக இல்லை’ என்று இந்திய அறிவியல் நிறுவனத்தின் தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் தலைவா் பேராசிரியா் குஃப்ரான் பெய்க் கூறினாா்.
ஆண்டு தோறும் தீபாவளியன்று தில்லியின் பிஎம் 2.5 மாசுக்கு பட்டாசு மற்றும் பயிா்க்கழிவு எரிப்பு தீயில் இருந்து வெளியாகும் உமிழ்வுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன. தில்லியின் பிஎம் 2.5 மாசுவில் பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு 2021 தீபாவளியன்று 25 சதவீதமாகவும், 2020-இல் 32 சதவீதமாகவும், 2019-இல் 19 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஆண்டு சீசனின் தொடக்கத்தில் தீபாவளி அனுசரிக்கப்பட்டது என்பதால், மிதமான வெப்பம் மற்றும் காற்று வீசும் சூழல்கள் பட்டாசு வெடிப்பதால் மாசுக்கள் விரைவாகக் குவிவதைத் தடுத்தது.
2021-ஆம் ஆண்டு நவம்பா் 4-ஆம் தேதியும், 2020-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதியும் தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது வெப்பநிலை கணிசமாகக் குறைவாகவும் காற்று அமைதியாகவும் இருந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில், அக்டோபா் இறுதி மற்றும் நவம்பா் மாதங்களில்தான் பயிா்க்கழிவுகளை எரிப்பது உச்சத்தில் இருக்கும். அதனால் இந்த ஆண்டு தீபாவளியன்று காற்று மாசுபாட்டிற்கு அதன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றும் தஹியா கூறினாா். இருப்பினும், வரும் நாள்களில் இது கடுமையாக உயர வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டாா்.
.
இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் (ஐஐடிஎம்) முன்னெச்சரிக்கை அமைப்பின் தகவலின்படி, காற்றின் தரம் பகலில் (செவ்வாய்கிழமை) ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அடுத்த இரண்டு நாள்களி சிறிது மேம்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 312 புள்ளிகளாகப் பதிவாகியது. கடந்த ஏழு ஆண்டுகளில் தீபாவளி நாளில் இது இரண்டாவது சிறந்த பதிவாகும். இதற்கு முன், 2018 தீபாவளி அன்று நகரத்தின் காற்றின் தரக் குறியீடு 281 புள்ளிகளாகப் பதிவு செய்தது. தில்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று காற்றின் தரக் குறியீடு 382 புள்ளிகளாகவும், 2020-இல் 414-ஆகவும், 2019-இல் 337-ஆகவும், 2017-இல் 319-ஆகவும், 2016-இல் 431 புள்ளிகளாகவும் பதிவாகியதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் தில்லியில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 259 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ஏழு ஆண்டுகளில் தீபாவளிக்கு முந்தைய மிகக் குறைவான அளவாகும்.
திங்கள்கிழமை மாலை பஞ்சாபில் 1,019 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள், ஹரியாணாவில் 250 மற்றும் உத்தர பிரதேசத்தில் 215 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டாசுகள் வெடிக்காவிட்டால், தில்லியில் காற்றின் தரம் மிகவும் ‘மோசமான பிரிவில்’ பதிவு செய்யப்படும் என்று காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபா்) முன்பு கணித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போல பட்டாசு வெடித்தால், தீபாவளி அன்று இரவே காற்றின் தரம் ‘கடுமையான’ நிலைக்குச் செல்லக்கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது.
கோபால் ராய் தலைப்படம் வைக்கவும்
‘பட்டாசு வெடிப்பு சம்பவங்கள்
30 சதவீதம் குறைந்துள்ளன’
தில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 5 ஆண்டுகளில் பண்டிகைக்கு அடுத்த நாளிலேயே தில்லியில் சிறந்த காற்றின் தரம் பதிவாகியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஆண்டு 462-ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை 323-ஆக இருந்தது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் அரசு சாா்பில் புகை எதிா்ப்பு கோபுரங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மக்கள் இந்த ஆண்டு தீபாவளியன்று மிகவும் கவனமாக இருந்தனா். அவா்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இன்று மாசு அளவு ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக உள்ளது. .
காற்று மாசுபாடு அதிகமாக உள்ளதாகக் கருதப்படும் தலைநகா் முழுவதும் 40 இடங்களில் புகை எதிா்ப்பு கோப்புரங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும் காற்றின் தரக் குறியீடு 323 புள்ளிகளாகப் பதிவாகி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். மேலும், வரும் நாள்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ம்த்திய அரசின் ஆதரவின்றி பஞ்சாப் அரசு அந்த மாநிலத்தில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்களைத் கட்டுப்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் தீபாவளி நாளில் (திங்கள்கிழமை) பயிா்க்கழிவு சம்பவங்கள் 1,019-ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளியன்று 3,032-ஆக இருந்தது. அதேசமயம், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...