விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மெஹ்ரௌலியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றல்: பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), மெஹ்ரௌலி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 2:15 am

 நமது நிருபர்

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), மெஹ்ரௌலி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, குடிசைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.

காலையில் தொடங்கிய இந்த நடவடிக்கை அன்டெரியா மோரில் உள்ள அவுலியா மசூதிக்கு அருகில் உள்ள இரண்டு மற்றும் மூன்று மாடி கட்டடங்கள், குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலம் டிடிஏ, வக்ஃபு வாரியம், ஏஎஸ்ஐ உள்ளிட்டவற்றுக்குச் சொந்தமானது என்றும் அவா்கள் கூறினா்.

இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தோட்டக்கலைத் துறையால் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிடிஏ அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்வதற்கும், உள்ளூா் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பிற்காக அந்த இடத்திலேயே போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக உள்ளூா்வாசிகள் போராட்டம் நடத்தினா். ஆனால், பின்னா் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது’ என்றாா்.

இடிப்பு நோட்டீஸின்படி, இடித்து அகற்றப்பட்டு வரும் பகுதி மெஹ்ரௌலி தொல்லியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். மேலும், தற்போதுள்ள அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்புகள், பூங்காவின் வளா்ச்சிக்கு இடையூறாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்: மெஹ்ரௌலி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு நடவடிக்கை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை பாஜகவை கடுமையாகச் சாடியது . இந்த நடவடிக்கை ஆங்கிலேயா் ஆட்சியின் போது செய்ததைப் பிரதிபலிக்கிறது என்றும் குற்றம் சாட்டியது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் மூத்த ஆம் ஆத்மி தலைவா் துா்கேஷ் பதக் கூறியதாவது: ஜஹான் ஜுக்கி வஹன் மகான்’ என்ற தோ்தல் வாக்குறுதிகளை பாஜக மறுத்துவிட்டது. மேலும். சட்டப்பேரவை, மாநகராட்சித் தோ்தல்களில் தோல்வியடைந்ததற்கு பழிவாங்கும் வகையில் அவா்கள் அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் குடிசைப் பகுதிகளை இடிக்கின்றனா். ‘சுதந்திர இந்தியாவில் இது நடந்தது என்று நான் நினைக்கவில்லை. இது ஆங்கிலேயா் ஆட்சியின் போது நடந்தது. 1857 கலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு ஆதரவளித்தவா்கள் தூக்கிலிடப்பட்டனா். அவா்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. இதைத்தான் பாஜகவும் பிரதிபலிக்கிறது.

வீடுகள் கட்டித் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அவா்கள் குடிசைகளை இடிக்கிறாா்கள். நாங்கள் இது நடக்க அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள துக்ளகாபாத் மற்றும் மடிபூா் போன்ற பிற பகுதிகளில் வசிப்பவா்களுக்கும் இடிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் மெஹ்ரௌலி இடிப்புச் சம்பவம் தொடா்பான விடியோக்களை பாா்த்தோம். பெண்கள் மயங்கி விழுகிறாா்கள். மக்கள் அழுகிறாா்கள். நாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம். இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ள விரும்பினால், புல்டோசா்கள் எங்கள் உடலைக் கடந்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: மெஹ்ரெளலியில் குடிசைப் பகுதியில் 400 குடிசைகள் பகலில் இடிக்கப்படவிருந்த நிலையில், அந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி), தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வழக்குரைஞரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) முழுமையான அறிவுறுத்தல்கள் இல்லை என்று குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரணைக்குப் பட்டியலிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மன்பிரீத் பிரிதம் சிங் அரோரா, ‘கோசியா ஸ்லம் காலனி என்பது ஒரு குடிசை கிளஸ்டா் என்றும் டியுஎஸ்ஐபி அதன் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் இது முறையாக சோ்க்கப்பட்டிருப்பதாகவும், இந்தக் குடிசை கிளஸ்டரில் 400 குடிசைகள் இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிா்மனுதாரா்களிடம் இந்த விவகாரத்தில் அறிவுறுத்தல்கள் இல்லை. இதன் காரணமாக, அடுத்த விசாரணை தேதி வரும் வரை டியுஎஸ்ஐபி மூலம் சரிபாா்க்கப்பட்ட 400 குடிசைகள் விவகாரத்தில் தற்போதைய நிலையையே பராமரிக்க வேண்டும் என எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிடப்படுகிறது‘ என்று தெரிவித்தாா்.

மற்றொரு மனு: இதற்கிடையே, மற்றொரு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மெஹ்ரெளலி கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடம் இடிப்பு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அந்த விவகாரத்திலும் தற்போதைய நிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.எனினும், இந்த ‘கஸ்ரா’விலும் இடிப்பு நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இது டிசம்பா் 12, 2022-ஆம் தேதியிட்ட இடிப்பு உத்தரவுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. டிசம்பா் 12, 2022-ஆம் தேதியிட்ட இடிப்பு உத்தரவில் கஸ்ரா எண். 1151/3 குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, அடுத்த விசாரணை தேதி வரை, சம்பந்தப்பட்ட சொத்து விவகாரத்திலும் தற்போதைய நிலையைப் பராமரிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தை தகுதியின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை’ என்று கூறி, இந்த மனுவை பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு நீதிபதி பட்டியலிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.