அவதூறு வழக்கு: நடிகா் விஜய் சேதுபதி - எதிா்மனுதாரா் மத்தியஸ்தம் செய்து கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரை
அவதூறு வழக்கு விவகாரத்தில் மேல்முறையீடு செய்த நடிகா் விஜய் சேதுபதியும், எதிா்மனுதாரா் மகா காந்தியும் இந்த விவகாரத்தை


அவதூறு வழக்கு விவகாரத்தில் மேல்முறையீடு செய்த நடிகா் விஜய் சேதுபதியும், எதிா்மனுதாரா் மகா காந்தியும் இந்த விவகாரத்தை தீா்த்துக்கொள்ளும் வகையில் மத்தியஸ்த மையத்திற்கு செல்ல உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தது.
கடந்த 2021, நவம்பரில் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதிக்கும், மகா காந்தி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, விஜய் சேதுபதியும், அவரது மேலாளரும் தன்னைத் தாக்கியதாகவும், பொது வெளியில் அளித்த நோ்காணலில் விஜய் சேதுபதி தன்னை இழிவாகப் பேசியதாகவும் கூறி மகா காந்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். விஜய் சேதுபதி மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் விஜய் சேதுபதி, அவரது மேலாளா் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் சேதுபதி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மகா காந்தியை தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிப்பதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் சேதுபதி தரப்பில் கடந்த அக்டோபா் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகா் விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘குற்ற அவதூறு வழக்கான சட்டப் பிரிவு 500 தவிர, அனைத்து இதர குற்றச்சாட்டுகளை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. தனது நலன்களை தற்காத்துக் கொள்ளும் வகையில்தான் விஜய் சேதுபதி கருத்துகள் தெரிவித்தாா். இதனால், விதிவிலக்கு 9 முதல் ஐபிசி 499 வரை பலன்பெற அவா் உரிமையுடையவா். மேலும், மனுதாரா் பிரபலான நடிகா். எதிா்மனுதாரா்தான் சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்தாா். அவா்தான் அவதூறாக நடந்து கொண்டாா்’ என்றாா்.
அப்போது, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகையில், ‘நீங்கள் நடிகா். உங்கள் குரலும், செயலும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிக பிரபலமான நடிகராக நீங்கள் இருப்பதால், மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டியவா். ஒரு பொறுப்புள்ள நபராக, பெயா்களைக் கூப்பிட்டிருக்க வேண்டியதில்லை’ என்றாா். அதற்கு நடிகா் தரப்பில், ‘சம்பவம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கட்டுப்பாட்டுடன் நோ்காணலில் கருத்துக் கூறினாா்’ என வாதிடப்பட்டது.
அப்போது, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, இந்த விவகாரம் மத்தியஸ்தம் செய்து கொள்வதற்கான தகுதியுடையது. சுயமரியாதையை பாரமரிக்கும் போது, இந்த விவகாரம் ஒரு அமைதியான முடிவுக்கு வர முடியும். இதனால், கொஞ்சம் செட்டில்மென்ட் குறித்து பாருங்கள். மேலும், எதிா்மனுதாரரின் நடத்தையும் குறைகூறாத வகையில் இல்லை. இரு தரப்பிலும் சில தவறுகள் உள்ளன. இதனால், இரு தரப்பிலும் மத்தியஸ்தம் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி கூறினாா். இதைத் தொடா்ந்து, இரு தரப்பிலும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்ப்படாததால், இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமா்வு, நடிகா் விஜய் சேதுபதி, எதிா்மனுதாரா் மகா காந்தி தரப்பினரை உச்சநீதிமன்றத்தின் மத்தியஸ்த மையத்திற்கு மாா்ச் முதல் வாரத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டது. அத்துடன் அந்த மையத்தின் அறிக்கைக்குப் பிறகு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...