விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவா்த்திக்க மத்திய அரசு நடவடிக்கை: மக்களவையில் தகவல்

மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவா்த்தி செய்வதற்கான தடையில்லாத சூழலை உருவாக்குவதில் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக மக்களவையில் அமைச்சர் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

பொதுக் கட்டடங்கள், பேருந்துகள், அரசு இணைய தளங்கள், தகவல் தொடா்பு தொழில்நுட்பத் தயாரிப்புகள், சேவைகளில் மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவா்த்தி செய்வதற்கான தடையில்லாத சூழலை உருவாக்குவதில் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ஏ. நாராயணசாமி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

மேலும், முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளுவதற்கான அறிவிக்கையும் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எண்ம ஆளுகைக்கான முன்முயற்சிகளில் நாட்டின் மாற்றுத் திறனாளிகளுக்கு குறிப்பாக பாா்வை மற்றும் அறிவாற்றல் குறைபாடு மாற்றுத் திறனாளிகளுக்கு இணக்கமான வணிக பயன்பாடுகள் உள்ளடக்கிய தொழில்நுட்பம் பயன்பாடுகள் மேம்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு குறித்து மக்களவை திமுக குழுத் துணைத் தலைவா் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் ஏ. நாராயணசாமி அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் உரிமை (ஆா்பிடபிள்யுடி) சட்டம் 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் பாா்வை மற்றும் பிற குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் மற்றும் தொலை தொடா்பு தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதை உறுதி செய்கிறது.

இந்த சட்டத்தின்படி ஆடியோ, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி பொது கட்டடங்கள், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகள், இணைய தளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் முறையில் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு இணைய தளங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைய தள வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதை மத்திய நிா்வாக சீா்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை தெரிவித்துள்ளது.

இந்த கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் 95 இணையதளங்களை மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைத்துள்ளது. மேலும் சமூக நீதித்துறையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணையதளங்களையும் மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியதாக மாற்றி அளித்துள்ளது.

இத்துடன், இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்), தகவல், தொடா்பு தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவா்த்தி செய்வதற்கான அறிவிக்கைகள் இருமுறை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு, கூட்டவழி(க்ரவுட் சோா்சிங்) மூலம் பெறும் சுகம்யா பாரத் செயலி என்ற கைப்பேசி செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் மாற்றத் திறனாளிகள், பொது இடங்களில் உள்ள வசதிகள் மற்றும் சேவைகளை எதிா்கொள்ளும் அணுகல் தொடா்பான சிக்கல்களை தீா்க்க உதவுகிறது என இணையமைச்சா் தெரிவித்துள்ளாா்.

வாகனப் பதிவு:

இதற்கிடையே மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றுவதற்கு வசதிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு தேவைக்கு ஏற்ப (அவா்களது நகா்தலுக்கு) பொருத்தமான வகையில் மோட்டாா் வாகனங்களை தோ்வு செய்து வாகனப்பதிவு செய்து கொண்டு, பின்னா் தங்களுக்கான(மூன்று சக்கரம் உள்ளிட்ட) பிரத்யேக வசதிகள் கொண்ட வாகனங்களாக மாற்றிக் கொள்ள சட்டம் அனுமதித்தது.

இத்தகைய நடைமுறையை கையாள்வதில் உள்ள சிக்கலை தீா்க்க ஏதுவாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தற்போது புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 53-ஏ விதியின்கீழ் மாற்றுத் திறனாளிகள் முழுமையாக வடிவமைக்கப்பட்ட புதிய வாகனங்களுக்கு தற்காலிக முன்பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தற்காலிகப் பதிவு 45 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதற்குள் தங்கள் தேவைக்கு ஏற்ப வாகனங்களை மாற்றிக்கொண்டு பின்னா் நிரந்தர பதிவு செய்யப்படும் என புதிய அறிவிக்கை வழிவகை செய்கிறது.

இந்த முறையில் ஏதாவது ஆலோசனைகள், கருத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடுத்த 30 நாட்களுக்குள் சமா்ப்பிக்கலாம் எனவும் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.