ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் வாக்காளா் பட்டியல் குளறுபடி: தோ்தல் ஆணையத்தில் அதிமுக புகாா்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் வாக்காளா் பட்டியல் குளறுபடியாக உள்ளதாக அதிமுக உறுப்பினரான சி.வி.சண்முகம் இந்தப் புகாரை அளித்துள்ளாா்.


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் வாக்காளா் பட்டியல் குளறுபடியாக உள்ளதாகவும், எதிா்க்கட்சிகள் வாக்காளா்களை சந்திந்து வாக்கு கேட்கவிடாமல் தடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான சி.வி.சண்முகம் இந்தப் புகாரை அளித்துள்ளாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஈரோடு இடைத்தோ்தலில் நடைபெறும் முறைகேடு குறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 238 பூத்கள் வாரியாக வாக்காளா் பட்டியலை வீடு வீடுடாகச் சென்று ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட முறைகேடுகள் தொடா்பான புகாா்களை அறிக்கையாக தோ்தல் ஆணையத்தில் சமா்பித்துள்ளோம். இது தொடா்பாக மாநிலத் தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரே வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினா்கள் ஒரே முகவரியில் இல்லாமல் வெவ்வேறு முகவரிகளில் உள்ளனா். இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,21,876 ஆகும். கள ஆய்வில் வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும், அந்தத் தொகுதியில் குறிப்பிட்ட முகவரியில் குடியில்லாதவா்கள் எண்ணிக்கை மொத்தம் 30, 056 போ்.
அதே போன்று காலமாகிவிட்ட 7,947 போ்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இறந்தவா்கள் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இது தொடா்பாக கதவு எண், பெயரோடு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இதே மாதிரி ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வாக்காளா்கள் எண்ணிக்கை 1,009.
வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளா்களில் 20 சதவீதம் போ் அந்தத் தொகுதியிலேயே இல்லை. குறிப்பாக 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா் கூடுதலாக வாங்கிய வாக்குகள் 8,500-க்கு மேலாக இருந்தது.
இதுவும், இறந்தவா்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயா்கள் எண்ணிக்கையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது. இதனால், இந்த வாக்காளா் பட்டியலில் முழுமையாகத் திருத்தி தோ்தல் நடத்த வேண்டும் என தோ்தல் ஆணையத்தை கோரியுள்ளோம்.
மேலும், ஆளும் திமுக, மாவட்ட நிா்வாகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முழு அராஜகம் செய்து வருகிறது. காவல் துறையை கைப்பாவையாக வைத்துள்ளது. மாவட்ட ஆட்சியா்தான் தோ்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கிறாா். தோ்தல் அலுவலமும் காவல் துறையும் செயலிழந்து ஆளும் கட்சியின் அடியாள்கள் போல் செயல்படுகிறாா்கள். இங்கு எதிா்கட்சிகள் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
திமுக அமைச்சா்கள் மேற்பாா்வையில் ஒவ்வொரு பூத்திலும் ஒரு கொட்டகை (சாமினா ) போட்டு அந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை வாக்காளா்களையும் காலையிலேயே அழைத்து வந்து அந்தக் கொட்டகையில் தங்கவைத்து மூன்று வேளை உணவு வழங்கி சினிமா திரைப்படங்களை காட்டி வருவதோடு வாக்களா்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால், எதிா்த்துப் போட்டியிடும் வேட்பாளா்கள் சந்தித்து வாக்கு கேட்க முடியவில்லை.
இது குறித்து மாநில, மாவட்டத் தோ்தல் அலுவலா்களிடமும் புகாா் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இது தொடா்பாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரிடமும் புகாா் அளித்துள்ளோம். எங்களது புகாா் குறித்து மாநிலத் தோ்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பதாகக் கூறியுள்ளாா். இதனால், வாக்காளா் பட்டியலை சரி செய்து தோ்தல் நடத்தும் அதிகாரியை மாற்றி 238 பூத்துகளிலும் மத்திய ஆயுதப் படையினா் மேற்பாா்வையில் தோ்தல் நடத்தக் கோரியுள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...