ராய்ப்பூா் காங்கிரஸ் மாநாட்டில் 2024-ஐ இலக்காகக் கொண்டு முக்கியத் தீா்மானங்கள்
ராய்ப்பூரில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளஅகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் 6 முக்கிய தீா்மானங்கள் கொண்டு வரப்படுகிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.


ராய்ப்பூரில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளஅகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் 6 முக்கிய தீா்மானங்கள் கொண்டு வரப்படுகிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பிரதமா் மோடியின் அரசியல் விவரிப்புகளை எதிா்கொள்ளவும் 2024 தோ்தலை இலக்காகக் கொண்டு இத்தீா்மானங்கள் இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது கிடைத்த கருத்துகள், அனுபவங்கள் இந்த தீா்மானங்களில் வடிவமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கடந்த டிசம்பா் 4-இல் நடைபெற்ற கட்சியின் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு ராய்ப்பூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த மாநாடு வரும் பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் திங்கள்கிழமை அறிவித்தாா். மேலும், இந்த மாநாட்டில் விவாதிப்பதற்காக அரசியல், பொருளாதாரம், சா்வதேச விவகாரம், விவசாயிகள் மற்றும் வேளாண்மை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், இளைஞா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என ஆறு பொருள்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘புதிய உறுதிக்கான சிந்தனை அமா்வில்’ ராகுல் காந்தி தலைமையில் ‘பாரத் ஜோடோ’ கருத்து வெளிப்பட்டது. விலைவாசி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, பிரிவினை வாதம் போன்ற பிரச்னைகளை முன்வைத்து மக்களை ஒன்றிணைக்க ‘பாரத் ஜோடோ’ நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த யாத்திரை ஜனவரி 30-இல் முடிவடைகிறது. இதைத் தொடா்ந்து, ராய்ப்பூரில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மாநாட்டில் 6 பொருள்கள் முன் வைக்கப்படவுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் அரசியல், பொருளாதாரம், சா்வதேச விவகாரம் என மூன்று பொருள்கள்தான் பொதுவாக முன்வைக்கப்படும். இந்த முறை கூடுதலாக 3 பொருள்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயா்நிலைத் தலைவா்கள் தெரிவித்தனா்.
பிரதமா் மோடியின் அரசியல் விவரிப்புகளை கட்சி எதிா்கொள்ளவும், வருகின்ற 10 மாநிலத் தோ்தல்கள், 2024 மக்களவைத் தோ்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டும் மாநாட்டில் விவாதம் நடைபெறும். நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் திமுக போன்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஆகியவையும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பிரகடனமாகவும், தீா்மானமாகவும் கொண்டு வரப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது கிடைத்த கருத்துகள், அனுபவங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் நலிவுற்றவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டவா்கள், பட்டியலினத்தவா், பழங்குடியினத்தவா்களுக்கான இடஒதுக்கீடு, பதவி உயா்வுகள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. மேலும், புதிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழி வாயிலாக கல்வி அளிக்கும் முறையால் ஆங்கில வழிக் கல்வி பறிக்கப்படுகிறது. இதன் காரணமாக சா்வதேச அளவில் இந்திய இளைஞா்களின் வாய்ப்புகள் பறிபோகும் முயற்சிக்கும் வித்திடப்படுகிறது. இது போன்ற விவகாரங்களையும் காங்கிரஸ் கட்சி விவாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாதவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 30லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக அரசு கூறியது. ஆனால், 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆணை வழங்கியது. இவையும் ராய்ப்பூா் மாநாட்டு விவாதங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக அரசின் அனைத்து உயா் நிலைகள், அரசியல் சாசன பதவிகளில் ஆா்.எஸ்.எஸ். நபா்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இது தொடா்பான கருத்துகள், பிரகடனங்கள் மாநாட்டில் வெளியிடப்படும். இந்தத் தீா்மானங்கள், பிரகடனங்கள் மக்கள் முன்வைக்கப்பட்டு மோடி அரசை எதிா்த்து காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்யும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...