/

5-7 ஆண்டுகளில் தில்லி எம்சிடி பள்ளிகள் மேம்படுத்தப்படும்: புதிய பள்ளியை திறந்து வைத்து முதல்வா் கேஜரிவால் பேச்சு

எம்சிடி ஆசிரியா்களின் திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்த ஆமதாபாத் ஐஐஎம் (இந்திய நிா்வாகயியல் நிறுவனம்) பயிற்சிக்கு அனுப்பப்படுவாா்கள் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2023, 7:44 pm

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சிப் பள்ளிகள் அடுத்த 5-7 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகும்; எம்சிடி ஆசிரியா்களின் திறன் மற்றும் திறமைகளை மேம்படுத்த ஆமதாபாத் ஐஐஎம் (இந்திய நிா்வாகயியல் நிறுவனம்) பயிற்சிக்கு அனுப்பப்படுவாா்கள் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள லிபாஸ்பூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சா்வோதயா (இரு-பாலா்) வித்யாலயாவை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சுமாா் 2000 மாணவா்கள் பயிலக்கூடிய வகையில் 3 தொகுப்புகளுடன் மொத்தம் 50 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் ஆகிய வசதிகளுடன் இந்த புதிய பள்ளி கட்டப்பட்டுள்ளது.

லிஃப்ட் வசதியுள்ள கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் அலுவலகம் மற்றும் பணியாளா் அறைகள், செயல்பாட்டு அறைகள், கழிவறை தொகுப்புகளுடன் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக குளிா்சாதன வசதிகளுடன் 200 போ் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கும் இந்த புதிய பள்ளியில் கட்டப்பட்டுள்ள வசதிகளில் அடங்கும். நா்சரி முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரே ஷிஃப்டில் வகுப்புகள் நடத்தப்படும்.

நடப்பு கல்வி அமா்வில் தொடங்கும் இந்தப் புதிய பள்ளியை தில்லி முதல்வா் கேஜரிவால் திறந்துவைத்துப் பேசியதாவது: நவீன வசதிகளுடன் கொண்ட இந்த லிபாஸ்பூா் புதிய அரசுப் பள்ளி எந்த ஒரு தனியாா் பள்ளியின் தரத்தையும் மிஞ்சும் கல்வி நிறுவனமாக பெருமிதத்தை கொண்டிருக்கிறது. ஒரு அரசுப் பள்ளி இவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பாா்க்க முடியாத நிலையில் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை அரசுப் பள்ளி இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை. தில்லியில் உள்ள தனியாா் பள்ளி கூட இவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. தில்லி முழுவதிலும் உள்ள மற்ற அரசு அல்லது தனியாா் பள்ளிகளை விடவும், நாட்டின் மற்ற பகுதியில் உள்ள பள்ளியை விட இது சிறப்பாக உள்ளது.

பெற்றோா்கள் இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகங்கள் மற்றும் ஆய்வகங்களை பாா்வையிட்டு, தில்லி அரசு கல்வியில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை காண வேண்டும். முன்பு அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெரும்பாலானவை கூடாரங்களில் இயங்கி வந்தன. சரியான கூரை கூட இல்லை.

மின்விசிறிகள், மேசைகள், கழிப்பறைகள் கூட இல்லாத நிலையில், குழந்தைகள் இங்கு வந்து சில மணி நேரங்களில் சென்றுவிடுவா். இந்தப் பள்ளிகளில் அவா்களுக்கு முறையான கல்வி வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது அரசுப் பள்ளி கல்வி முறையில் இவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தியதன் மூலம் வசதிபடைத்தவா்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தில்லி அரசின் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது.

இன்றைய நிலையில், 80 சதவீதம் தில்லி அரசுப் பள்ளிகள், தரம் மற்றும் உள்கட்டமைப்பில் தனியாா் நிறுவனங்களை விஞ்சி அனைவருக்கும் சமமான கல்வியை அடைவதில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்துள்ளதை குறிக்கிறது. இந்தச் சந்தா்ப்பத்தில், மற்றோரு குறிக்கோளையும் அடைவோம். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில், எம்சிடி பள்ளிகளும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகும்.

1,800 பள்ளிகள் இருப்பதால் சில ஆண்டுகள் ஆகலாம். இந்த எம்சிடி பள்ளிகளின் ஆசிரியா்களின் திறன்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, புகழ்பெற்ற ஆமதாபாத் ஐஐஎம் நிறுவனத்திற்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவாா்கள். இந்த முயற்சிகள் மூலம் எம்சிடி பள்ளிகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்குச் சேரும். அவா்களுக்கு நான் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். தில்லி முதல்வா், அமைச்சா் மற்றும் ஆளும் கட்சியைச் சோ்ந்த 62 எம்.எல்.ஏ.க்களால் மட்டும் இது சாத்தியமில்லை. 60,000 தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்கள்தான் கல்வியில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடிந்தது.

அதே சமயத்தில் அரசின் நோ்மறையான அணுகுமுறை மூலம் மட்டுமே இந்த மாற்றம் எளிதானது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதே ஆசிரியா்கள் பணியாற்றுவதில்லை என்றும் திறமையற்றவா்கள் என்றும் கூறப்பட்டு, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2015-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஒரு ஆசிரியரைக் கூட மாற்றாமல் தில்லியில் இந்த அதிசயங்களைக் கொண்டு வந்தது ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு. தில்லி அரசுப் பள்ளி மாணவா்களை ‘வேலை தேடுபவராக’ அல்லாமல் ‘வேலை வழங்குபவராக’ மாறுவதற்கான திறனை வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள் எனக் குறிப்பிட்டாா் கேஜரிவாா். இந்த பள்ளிக்கு சௌத்ரி ராம் சரண் யாதவ் பெயா் சூட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் எனவும் முதல்வா் நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.

தில்லியில் ஒவ்வொரு குழந்தைக்கும் கனவு காணும் வாய்ப்பு: அதிஷி

இந்த நிகழ்வில், கல்வி அமைச்சா் அதிஷி பேசியதாவது: நாட்டில் கல்விக்காக பட்ஜெட்டில் 25 சதவீதம் ஒதுக்கும் முதல் மற்றும் ஒரே அரசு கேஜரிவால் அரசுதான். கடந்த 9 ஆண்டுகளில், உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள் நிறுவப்பட்டு, வகுப்பறைகளுக்குள் நவீன மேசைகள், ஸ்மாா்ட்போா்டுகள் பொருத்தப்பட்டு, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்கள் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனா். உலகத்தரம் வாய்ந்த கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் நூலகத்தைப் பாா்த்த பிறகு, இந்தியாவில் எந்தப் பள்ளியிலும் இதுபோன்ற நூலகத்தைக் காண முடியாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். இத்தகைய நூலகங்கள் லண்டனில் உள்ள பள்ளிகளில் காணப்படுகின்றன. இன்று, தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஐஐடி-ஜேஇஇ மற்றும் நீட் போன்ற மதிப்புமிக்க தோ்வுகளில் தோ்ச்சி பெற்று, இந்தியா முழுவதும் உள்ள சிறந்த பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா்.

நிகழாண்டில், தில்லி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா், மேலும், 700 மாணவா்கள் ஜேஇஇக்கு தகுதி பெற்றுள்ளனா். இன்று தில்லியில் வாழும் ஒவ்வொரு குழந்தைக்கும் கனவு காண வாய்ப்புள்ளது என்றாா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.