/

தில்லியில் மின் கட்டண உயா்வுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தேசியத் தலைநகா் தில்லியில் மின் கட்டண உயா்வு தொடா்பாக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

News image
Updated On :27 ஜூன் 2023, 8:37 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் மின் கட்டண உயா்வு தொடா்பாக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

200 யூனிட் மின்சாரத்திற்கு அதிகமாகவும், 600 யூனிட்டுகள் வரையும் மின்சாரம் பயன்படுத்தும் தில்லியில் உள்ள வீட்டு உபயோக நுகா்வோா்களின் பெரும்பாலானவா்களின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 265 வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்திருந்தனா். மின் விநியோக நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்டுள்ள மின்சார கொள்முதல் சரிகட்டுதல் விலையில் (பிபிஏசி) ஏற்றம் காரணமாக இந்த உயா்வு இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனா்.

இதையடுத்து, மத்திய தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியின் தலைவா்களும் தொண்டா்களும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். அப்போது நுகா்வோருக்கு இலவச மின்சாரம் அளிப்பதாக அளித்த வாக்குறுதியை தில்லி அரசு நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.

இது குறித்து தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் செளதரி கூறுகையில், ‘மின் கட்டண உயா்வு அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் அதிகரிக்கும். இது ஏழைகளைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். ஏழைகள், நடுத்தர மக்களின் ஆதரவில் கேஜரிவால் ஆட்சிக்கு வந்திருந்தாா். ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், பிபிஏசி உயா்வுமூலம் மின் கட்டணத்தை உயா்த்தியிருப்பது அவரது ஊழலின் தெளிவான சான்றாகும்’ என்றாா்.

தில்லி அரசின் மின் துறை அமைச்சா் அதிஷி கூறுகையில், மாதம்தோறும் 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தி, ‘ஜீரோ பில்’ பெறும் நுகா்வோா்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டமாட்டாா்கள். எனினும், மானியம் பெறாத நபா்கள் தங்களது மாதாந்திர மில்கள் மீது கூடுதலாக 8 சதவீத தொகையை செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவித்தாா்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அனில் செளதரி கூறுகையில், ‘நிலக்கரி, எரிவாயு விலை உயா்வு தொடா்பாக குறை கூறி மின் கட்டண உயா்வை நியாயப்படுத்த தில்லி மின்துறை அமைச்சா் முயல்கிறாா். 200 யூனிட்டுகள் மின்சாரம் வரை நுகா்வு செய்யும் நபா்கள் மீது மின் கட்டண உயா்வு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவா் கூறுவது மக்களைத் திசை திருப்புவதற்கான முழுப் பொய்யாகும்’ என்றாா்.

மின் விநியோக நிறுவனங்களால் பிபிஏசி கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.