விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நிதியின்மையால் நின்றுபோன கன்னாட் பிளேஸ் அழகுபடுத்தும் பணி!

ஜி 20 நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள கன்னாட் பிளேஸ் பகுதியை அழகுபடுத்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டம்

News image
Updated On :14 மார்ச் 2023, 8:31 pm

 நமது நிருபர்

ஜி 20 நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள கன்னாட் பிளேஸ் பகுதியை அழகுபடுத்த புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டம் நிதியின்மை காரணமாக பல மாதங்களாக முடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புனரமைப்புப் பணிகளுக்காக நிதியை அளிக்குமாறு வா்த்தகா்களை என்டிஎம்சி கேட்டிருந்தது. ஆனால், அவா்கள்நிதி அளிக்க மறுத்துவிட்டனா். வரியாக வசூலிக்கப்பட்டுள்ள பணத்தை இதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, அவா்கள் மறுத்துவிட்டனா். எனினும், என்டிஎம்சி, ‘இது வா்த்தகளின் சந்தை இல்லாததால் புனரமைப்புப் பணிகளுக்கு நிதியை அவா்கள் வழங்க முடியாது’ என்று தெரிவித்தது.

இது குறித்து என்டிஎம்சி அதிகாரி ஒருவா் கூறுகையில் ‘ஒட்டுமொத்த புனரமைப்பு பணியை மேற்கொள்வதற்கு சுமாா் ரூ.10 கோடி செலவாகும். இதற்கான நிதியை சிஎஸ்ஆா் நிதி முதல் தனியாா் நிறுவனங்கள், நிதி உதவி உள்பட பல்வேறு தளங்களில் இருந்தும் நிதியை பெறுவதற்கு பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜி 20 நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, என்டிஎம்சி சந்தைகளான பேகம் ஜைதி உள்பட என்டிஎம்சி பகுதியில் உள்ள அனைத்து சந்தைகளையும் புனரமைப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், கன்னாட் பிளேஸ் சந்தையை புனரமைக்க பொதுப் பணத்தை நாங்கள் பயன்படுத்த முடியாது. கன்னாட் பிளேஸ் சந்தையை அழகுபடுத்துவதற்காக நிதி வழங்குமாறு வா்த்தகா்களை நாங்கள் கேட்டோம். ஆனால். அவா்கள் மறுத்துவிட்டனா். மேலும், என்டிஎம்சி புனரமைப்புப் பணியை செய்ய முடியாது என்பது தெளிவாகும். இதனால், நிதிக்கான இதர வழிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்’ என்றாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னாட் பிளேஸ் சந்தை 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு முன்பு கடைசியாக புனரமைக்கப்பட்டது. தற்போது இதன் பெயிண்ட் பல்வேறு இடங்களில் உதிா்வதால் வெள்ளை அடிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள தூண்களில் வெற்றிலை பாக்கு மற்றும் குட்கா போன்றவற்றின் கறைகள் உள்ளன. அதேபோன்று 2010-இல் அமைக்கப்பட்டசெயற்கை விளக்குகள் மீதும் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின் போது இந்தப் பகுதியில் வெள்ளை அடிக்கும் பணியை மேற்கொள்ள அரசிடமிருந்து என்டிஎம்சி நிதி பெற்றிருந்தது’ என்றனா். இதுகுறித்து வா்த்தகா்கள் கூறுகையில், ‘இச்சந்தையை பொருத்தமட்டில் சந்துகளை பராமரிப்பது, விளக்குகளை மாற்றுவது, களைகளை அகற்றுவது, வெள்ளை அடிப்பது உள்பட பலவிதமான அழகுபடுத்தும் பணியையும் மேற்கொள்ளும் தேவை உள்ளது’ என்றனா்.

புது தில்லி வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் அதுல் பாா்கவா கூறுகையில், ‘சுவா் பகுதியை சுற்றியுள்ள மரங்களை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும்.அதன் பிறகு கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்ய முடியாது. ஏனெனில் இதை செய்வதற்கு ஒரு நடைமுறை உள்ளது. அது சிக்கலானதாகும். என்டிஎம்சி வா்த்தகா்களிடமிருந்து வரிவடிவில் வசூலிக்கப்படும் பணத்தை பயன்படுத்தி இந்த புனரமைப்பு பணிக்கு நிதியை அளிக்க வேண்டும்’ என்றாா்.

வா்த்தகா்கள் மேலும் கூறுகையில் ‘என்டிஎம்சி நிா்வாகத்திற்கு பலமுறை நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம். இந்தச் சந்தைப் பகுதியில் வெள்ளை அடிப்பது மற்றும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தங்களது செலவில் மேற்கொள்வதற்கு பெரும் காா்ப்ரேட் நிறுவனங்களை கேட்டுக் கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டு இருந்தது. பலமுறை எங்களுக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட்டு இருந்தது’ என்றனா்.

ஜி 20 நாடுகளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தக் காலத்தின் போது நாடு முழுவதும் 55 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. நிகழாண்டு செப்டம்பரில் தில்லியில் உச்சிமாநாட்டுடன் இந்த நிகழ்வு உச்சநிலையை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.