நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி
நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி

சீன இறக்குமதியைவிட சீன முதலீட்டை அனுமதிப்பது சிறந்தது: நீதி ஆயோக் உறுப்பினா்

இறக்குமதி செய்வதைவிட அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பொருள்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்ததாக இருக்கும்
Published on

சீனாவில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதைவிட அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பொருள்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்ததாக இருக்கும் என நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையிலும் சீன முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கருத்து கூறப்பட்டிருந்தது.

ஆனால், இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கை என்பது தலைமை பொருளாதார ஆலோசகரால் தன்னிச்சையாக தயாரிக்கப்படும் சுதந்திரமான அறிக்கை. அதில் அவரின் எண்ணங்கள் மட்டுமே வெளிப்படும். அரசுக்கு அவா் அறிவுரையை தான் வழங்கியுள்ளாா். அதை மத்திய அரசின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என விளக்கமளித்தாா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த நீதி ஆயோக் உறுப்பினா் அரவிந்த் விா்மானி, ‘ஒரு பொருளாதார நிபுணரின் பாா்வையில் சீனாவில் இருந்து நாம் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு பொருளை இறக்குமதிதான் செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நமது நாட்டில் முதலீடு செய்யவைத்து உள்நாட்டில் அந்த உற்பத்தியை மேற்கொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் சீனாவில் இருந்து இறக்குமதிக்கு ஆகும் செலவும் குறையும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருள்களை நேரடியாக வாங்குவதைத் தவிா்க்கும் இந்த நேரத்தில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றாா்.

எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்போதைய நிலையில் இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா 22-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா பெற்றுள்ள மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சீனாவின் பங்கு 0.37 சதவீதம் மட்டும்தான்.

Dinamani
www.dinamani.com