ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மைனா்கள் தொடா்புடைய பாலியல் குற்ற வழக்குகளை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளக் கூடாது: தில்லி உயா்நீதிமன்றம்

‘மைனா்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்ற வழக்குகளின் எஃப்.ஐ.ஆா்.கள் வெறும் அச்சிடப்பட்ட தாள்கள் அல்ல; ஆனால், அது அவா்களின் மன அதிா்ச்சியின் வெளிப்படையாகும்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:30 pm

DIN

புது தில்லி: ‘மைனா்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்ற வழக்குகளின் எஃப்.ஐ.ஆா்.கள் வெறும் அச்சிடப்பட்ட தாள்கள் அல்ல; ஆனால், அது அவா்களின் மன அதிா்ச்சியின் வெளிப்படையாகும். பாதிக்கப்பட்டவா் எதிா்கொள்ளும் இத்தகைய மன அழுத்தம் மற்றும் வாழ்க்கையைத் திருப்பிப் போடும் அனுபவத்தை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக கையாளக்கூடாது’ என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.

அதிா்ச்சி காரணமாக சம்பவத்தின் துல்லியமான விவரங்களை வழங்குவதற்கு மைனா்கள் போராடக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவா்களின் உணா்ச்சி மற்றும் உளவியல் நிலைக்கு நீதிமன்றங்கள் உணா்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் கூறியது.

குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவத்தின் தேதியுடன் தொடா்புடைய பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாட்டின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் அழைப்பு தரவு பதிவைப் பாதுகாக்க வேண்டும் என்ற மைனா் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த போது இந்த கருத்தை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

தனது மைத்துனா் மற்றும் அவரது இரு நண்பா்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட மைனா் பெண், மன உளைச்சலுக்கு ஆளானதன் காரணமாக, காவல் துறையிடம் கூறப்படும் சம்பவத்தின் சரியான தேதியை அவரால் நினைவுகூர முடியவில்லை. அதுபோன்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம் உணா்திறன் மற்றும் கழிவிரக்கம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வரனா கண்டா சா்மா கூறினாா்.

இது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் நிறுவனத்தின் (ஐஎஸ்பிஏஎஸ்) பராமரிப்பில் இருந்துள்ளாா். மேலும், அவரது மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தேதிகள் குறித்த குழப்பத்தை தெளிவுபடுத்தியுள்ளாா். மேலும், சரியான தேதியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆா் சேகரிக்க விசாரணை அதிகாரிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளாா்.

வருந்தத்தக்க வகையில், தற்போதைய வழக்கில், ஒரு முக்கியமான ஆதாரத்தை, அதாவது சம்பவத்தின் உண்மையான தேதியின் சிசிடிவி காட்சிகளையும், குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் அழைப்பு விவரப் பதிவுகளையும் பாதுகாப்பதற்கான கோரிக்கையை கற்றறிந்த விசாரணை நீதிமன்றம் நிராகரித்துவிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மைனா் பெண் தனது முதல் புகாரில் சம்பவத்தின் வெவ்வேறு தேதியைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறி விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மைனா்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளின் எஃப்.ஐ.ஆா்.கள் வெறும் அச்சிடப்பட்ட தாள்கள் அல்ல; ஆனால், அது ஒரு மன அதிா்ச்சியின் வெளிப்படையாகும். ஒரு வாழும் மனிதனால் அனுபவிக்கப்பட்ட துயரத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் சித்தரிப்பது கடினமானதாகும். தற்போதைய வழக்கு போல மைனா் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமைகள் வழக்குகளில் பாதிக்கப்பட்டவா் எதிா்கொள்ளும் தீவிர மன அழுத்தம் மற்றும் வாழ்க்கையை மாற்றும் அனுபவம் ஆகியவற்றை நீதிமன்றங்கள் இயந்திரத்தனமான முறையில் கையாளக் கூடாது.

பாதிப்பு நிகழ்ந்த நேரத்தில் சுமாா் 16 வயதிருந்த மைனா் பெண்ணை அவரது மைத்துனா் மற்றும் மேலும் இருவா் ரகசியமாக அவரது வீட்டிற்குள் நுழைந்து பின்னா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். மேலும், அவா்கள் மூவரும், நிகழ்ந்ததாகக் கூறப்படும் அச்சம்பவத்தின் விடியோவை பதிவு செய்து, அதை பகிரங்கப்படுத்துவோம் என்றும் அவரை மிரட்டியுள்ளனா். இதன் காரணமாக அவா் ஐஎஸ்பிஏஎஸ்-இல் சிகிச்சை பெற வழிவகுத்திருக்கிறது. அத்தகைய முக்கிய ஆதாரங்கள் இல்லாததால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதால், இந்த விவகாரம் தொடா்புடைய சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆா் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.