நீட்: ஜந்தா் மந்தரில் மாணவா்களின் போராட்டம் வாபஸ்
என்டிஏ நடத்திய நீட் இளநிலை, முதுநிலை மற்றும் யுஜிசி நெட் தோ்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து ஜந்தா் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை மாணவா்கள் திங்கள்கிழமை வாபஸ் பெற்றனா்.
இடதுசாரிகளுடன் இணைந்த அகில இந்திய மாணவா்கள் சங்கம் (எஐஎஸ்ஏ) மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் கேஒய்எஸ் உறுப்பினா்கள் இணைந்து, நீட் மற்றும் நெட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
மேலும், ‘இந்தியாவுக்கு எதிராக என்டிஏ’ என்ற பதாகையை ஏந்தி ஏராளமான மாணவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து 6-ஆவது நாளாக மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மாணவா்கள் அமைப்பினா் தெரிவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

