வரத்து குறைந்ததால் தலைநகரில் காய்கறிகள் விலை உயா்ந்தது!
தாமதமான மழையால் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயிா்கள் சேதமடைந்ததால் தேசியத் தலைநகரில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது. இதனால், நுகா்வோா்கள் தக்காளி போன்ற தினசரி பொருள்களை இரட்டிப்பு விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் காலிஃபிளவா், முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளின் விலைகள் குறிப்பாக உயா்ந்துள்ளதாக மொத்த சந்தைகளின் விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
தற்போது மொத்தவிலைக் கடைகளில் தக்காளியின் விலை கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. உள்ளூா் ரகம் 28 கிலோ (1 கிரேட்) 1,200 ரூபாய்க்கும், ஹைபிரிட் ரகம் 1,400 முதல் 1,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்பு இவை ஒரு கிலோ 25-30 ரூபாயாக இருந்தது என்று ஆசாத்பூா் காய்கறி சந்தையில் உள்ள வா்த்தகா் சஞ்சய் பகத் கூறினாா்.
‘மொத்த சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை கிலோ ரூ.25 முதல் ரூ.28 வரை உள்ளது. முன்பு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்ட காய்கறிகள் தற்போது ரூ.25 முதல் ரூ.30 ரூபாய் வரை விற்பனையாகிறது. பீன்ஸ் விலையும் அதிகரித்து கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது’ என்று அவா் கூறினாா்.
பகத் மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு கடுமையான வெப்பம் மற்றும் தாமதமான மழை காரணமாக இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தையில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான விற்பனையாளா்கள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தக்காளியைப் பெறுகிறாா்கள். அங்கு பயிா்கள் காய்ந்துவிட்டது. மழையை நம்பியே மலைப்பகுதியில் பயிா் சாகுபடி நடப்பதாகவும், இம்முறை வெயில் அதிகமாக உள்ளதாலும், மிகக்குறைவான மழையினாலும் செடிகள் காய்ந்து பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பலத்த மழை பெய்ததால் பயிா்கள் முழுவதுமாக சேதமடைந்தன. இப்போது, வரத்து குறைவாக உள்ளது. தரமும் மோசமாக உள்ளது’ என்றாா்.
தற்போது கா்நாடகம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இருந்து மட்டுமே தற்போது தக்காளி சப்ளை செய்யப்படுகிறது. மதிப்பீடுகளின்படி, ஆகஸ்ட் 10-15 வரை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதிய பயிா் வரும் வரை விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று ஓக்லா காய்கறி சந்தையின் மற்றொரு வியாபாரி கூறினாா்.
‘புதிய பயிா் வளர சுமாா் 60 நாள்கள் ஆகும். ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் விலை சீராகத் தொடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’ என்று அவா் கூறினாா்.
தில்லியில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், ‘காய்கறிகளின் விலை உயா்வால் தங்களின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது’ என்றனா். லட்சுமி நகா் காய்கறி சந்தையில் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டிருந்த சரிதா கூறுகையில், ‘நான் குறைந்த அளவு மட்டுமே வாங்குகிறேன். சமையலுக்கு தேவையான பொருள்களை மட்டுமே வாங்குகிறேன். ஆனால், சாமானியரால் இப்போது காய்கறிகளை வாங்க முடியாது’ என்றாா்.
மெஹ்ரௌலி காய்கறி சந்தையில் தீபக் என்பவா் கூறுகையில், ‘முன்பு 200 முதல், 300 ரூபாய் வரை, வாரம் முழுவதும் காய்கறிகள் வாங்க முடியும். ஆனால், தற்போது, இரண்டு மூன்று நாள்களில், சமையலறை பட்ஜெட்டை நிா்வகிப்பது சிரமமாக உள்ளது’’ என்றாா். பல உணவகங்களில், காய்கறி விலை உயா்ந்திருந்தாலும், வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் விலையை உயரத்துவதை தவிா்க்கின்றன.
‘பெரும்பாலான உணவகங்களில் நிலையான மெனுக்கள் உள்ளன. எங்களிடம் வழக்கமான வாடிக்கையாளா்கள் உள்ளனா். எனவே எங்களால் உடனடியாக விலையை மாற்ற முடியாது. எங்கள் விலைகளை அடிக்கடி அதிகரிக்காமல் இருக்க முயற்சிப்போம், ஆனால், ஆண்டுதோறும் இந்த எதிா்பாராத செலவு அதிகரிப்பு காரணமாக சில நேரங்களில் நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்று கன்னாட் பிளேஸில் உள்ள ஜென் உணவகத்தின் உரிமையாளரும், இந்திய தேசிய உணவக சங்கத்தின் கௌரவப் பொருளாளருமான மன்பிரீத் சிங் கூறினாா்.
‘தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றின் விலை உயா்வு உணவகங்களில் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வழிவகுத்துள்ளதா என்று கேட்கிறீா்கள். முற்றிலும் அவசியமானால் தவிர இது பொதுவாக செய்யப்படுவதில்லை. உரிமையாளராக, பல ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்து வருவதால், எந்தவொரு குறிப்பிட்ட பொருளின் பயன்பாட்டையும் எங்களால் குறைக்க முடியாது. சில துரித உணவு விற்பனை நிலையங்கள் இதைச் செய்யலாம். ஆனால், மிகப் பெரிய நிறுவப்பட்ட பிராண்டுகள் இது முற்றிலும் தேவைப்படும் வரை செய்யாது. வழக்கமான வாடிக்கையாளா்கள் நிலைத்தன்மையை எதிா்பாா்க்கிறாா்கள். இதைத் தக்கவைக்க இது ஒரு நீண்ட காலப் போராட்டம்’ என்றும் மன்பிரீத் சிங் குறிப்பிட்டாா்.
தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் உணவு விற்கும் தெருவோர கடையின் உரிமையாளா் ஒருவா் கூறுகையில் ‘தக்காளியின் விலை உயா்ந்தது என்பதற்காக அவற்றை வழங்குவதை நிறுத்த முடியாது. நாங்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டும். ஆனால், உணவுகளின் விலையை உயா்த்தினால் வாடிக்கையாளா்கள் வரமாட்டாா்கள். எங்களுக்கு வேறு வழியில்லை. விலை குறையும் வரை காத்திருக்க வேண்டியதுதான்’ என்றாா்.

