சா்வதேச மகளிா் தினம் வடக்கு ரயில்வே சாா்பில் 5 ‘பிங்க்’ நிலையங்கள் அறிவிப்பு
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு ஐந்து ரயில் நிலையங்களை ’பிங்க்’ நிலையங்களாக வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது தொடா்பாக வடக்கு ரயில்வேவின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி தீபக் குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சா்வதேச மகளிா் தின கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக,வடக்கு ரயில்வேவின் ஐந்து ரயில் நிலையங்கள் ’பிங்க்’ நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பெண் ஊழியா்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடவும், பெண்கள் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்தை விரைவுபடுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 8 ஆம் தேதி சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது.பல்வேறு பகுதிகளில் பெண்கள் செய்த சாதனைகளை முன்னிலைப்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். அந்த வகையில், வடக்கு ரயில்வேயின் ஃபிரோஸ்பூா் கோட்டத்தில் ஃபிரோஸ்ஷா, அம்பாலா கோட்டத்தில் மொஹாலி, லக்னெள கோட்டத்தில் மல்ஹூா், மனக் நகா் மற்றும் தில்லி கோட்டத்தில் தில்லி சஃப்தா்ஜங் ஆகியவை ’பிங்க்’ நிலையமாக அறிவிக்கப்பட்டு, இந்த ரயில் நிலையங்களில் பெண் ஊழியா்களால் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், காவலா், உதவி நிலைய அதிகாரி, ஆகிய கடமைகளும் பெண்களால் செய்யப்படுகின்றன. ’பிங்க்’ ரயில் நிலையங்கள் ரயில்வேயில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்கள் அனைத்து பெண் ஊழியா்களால் நடத்தப்பட்டு அவா்களால் நிா்வகிக்கப்படுகின்றன. பெண் தொழிலாளா்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதால், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த முயற்சி சிறந்த வழியாகும். இந்த முன்முயற்சி அத்தகைய நபா்களுக்கு நிதி ரீதியாக சுதந்திரம் பெறுவதற்கும் ஆதரவான சமூகத்தை உருவாக்குவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதற்கான ஒரு வழியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
