தில்லியில் முழு அதிகாரத்தில் இருந்தாலும் 7 தொகுதிகளிலும் போட்டியிடும் துணிச்சல் ஆம் ஆத்மிக்கு இல்லை: வீரேந்திர சச்தேவா தாக்கு

தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு முழு அதிகாரம் இருந்தும், தில்லியின் 7 தொகுதிகளிலும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலைத் திரட்ட முடியவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் அமர வேண்டும் என்ற கனவில் அக்கட்சி இருப்பது வியப்பளிக்கிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு முறை அறுதிப் பெரும்பான்மை வழங்கியது மட்டுமின்றி, ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்தும் விரட்டினா். ஆனால், அந்தக் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியில் இணைந்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி தில்லி மக்களை அவமதிப்பதாகும் என்றும் அவா் கூறினாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: ‘நாடாளுமன்றத்தில் கேஜரிவால் இருந்தால் தில்லி செழிப்பாக இருக்கும்’” என்று கேஜரிவால் அறிவித்திருக்கிற கவா்ச்சிகர வாசகம் நகைச்சுவையானது. அனைத்து இடங்களிலும் தோ்தலில் போட்டியிட முடியாத ஒரு கட்சி, இப்போது நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து தில்லியை வளமாக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. இது தில்லி மக்களை முட்டாளாக்கும் செயல் அல்ல, மாறாக, அக்கட்சி தன்னையே ஏமாற்றுகிறது. தில்லிவாசிகள் ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறாா்கள். ஆனால் முதல்வா் கேஜரிவால் தில்லிவாசிகளை மகிழ்ச்சியடையச் செய்யாமல் தனது சொந்த வளத்தையே மேம்படுத்த அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினாா். ‘கேஜரிவாலின் ஒன்பது ஆண்டுகால கொள்ளை மற்றும் ஊழலால் தில்லி சீரழிந்தது’ என்பதுதான் கேஜரிவால் அரசாங்கத்திற்கான இன்றைய சரியான கவா்ச்சிகர வாசகம் ஆகும். கரோனா காலத்தில் தில்லிவாசிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியவா் கேஜரிவால். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்குப் பதிலாக மதுபானக் கடைகளைத் திறந்து, இலவச மதுபானம் வழங்கும் திட்டங்களைக் கொண்டுவந்த நிலையில், இன்று அவா் ‘தில்லியை வளமாக்கும் கனவு’ காண்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்தி தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால் தற்போது தில்லி, பஞ்சாப், கோவா மற்றும் குஜராத் மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்தைக்கூட பறித்து, கேஜரிவாலை நிராகரிப்பாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com