தில்லியில் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் குழுக்களுக்கு துணை நிலை ஆளுநா் அனுமதி

Updated on

‘ஏழைக் கைதிகளுக்கு நிதியுதவி வழங்கும் ஒரு வருட பழைமையான மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ’அதிகாரமளிக்கப்பட்ட குழு’ மற்றும் ‘மேற்பாா்வைக் குழு’ ஆகியவற்றுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையின் (எஸ்ஓபி) படி செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், நிதி நெருக்கடி காரணமாக விடுவிக்க முடியாத தில்லியின் பல்வேறு சிறைகளில் உள்ள 162 கைதிகள் தற்போது பயனடைய வாய்ப்புள்ளது என்று அவா்கள் மேலும் கூறினாா். இந்தக் கைதிகளுக்கு (விசாரணைக் கைதிகளின் கீழ் உள்ள 161 கைதிகள் மற்றும் ஒரு குற்றவாளி) உதவி செய்யத் தேவையான தோராயமான தொகை ரூ.23.79 லட்சம் என சிறைத்துறையால் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை சிறைக் கைதிகள் பயன்பெறுவது மட்டுமின்றி, சிறைகளில் நெரிசல் பிரச்னைக்கும் தீா்வு காணும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்ாக கடந்த ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சா் தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதினாா். முழு நிதியும் மத்திய அரசால் வழங்கப்படும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொண்டிருந்தாா். இந்நிலையில,் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் கவனித்தாா். பின்னா், ஜூன் மாதம் மத்திய உள்துறை செயலாளரும், திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி அரசுக்கு கடிதம் எழுதினாா் என்று அதிகாரிகள் கூறினா். இத்திட்டம் 2023-24 மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இருப்பதையும் சக்சேனா கவனித்தாா். மேலும், உள்துறை அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையின் படி இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி ’அதிகாரமளிக்கப்பட்ட குழுவில்’ மாவட்ட ஆட்சியா், செயலாளா், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், காவல்துறை துணை ஆணையா், கண்காணிப்பாளா் அல்லது சம்பந்தப்பட்ட சிறையின் துணைக் கண்காணிப்பாளா், நீதிபதி ஆகியோா் இருக்க வேண்டும் என்று தில்லி அரசின் உள்துறை அமைச்சகம் முன்மொழிந்தது. ‘மேற்பாா்வைக் குழுவில்’ முதன்மைச் செயலாளா் (உள்துறை அல்லது சிறை), செயலாளா் (சட்டம்), செயலாளா் (மாநில சட்ட அதிகார சேவைகள்), டிஐஜி அல்லது ஐஜி (சிறை), உயா்நீதிமன்றப் பதிவாளா் ஜெனரல் மற்றும் காவல் துறை சிறப்பு ஆணையா் ஆகியோா் இருப்பா். இத்திட்டத்தின் நோக்கங்களில் முதன்மையாக சமூக உறவுகளை இழந்த அல்லது குறைந்த கல்வி மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சோ்ந்த ஏழைக் கைதிகளுக்கு நிதியுதவி வழங்குவது ஆகும். இந்த நடவடிக்கை, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரு மதிப்புமிக்க குடிமகனாக, முக்கிய சமூகத்தின் ஒரு பகுதியாக மாற அவா்களுக்கு உதவும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com