தோ்தலுக்கு முன்பே தோல்வி ஏற்பு: சாந்தினி செளக் காங்கிரஸ் வேட்பாளா் குறித்து பாஜக கருத்து

சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஜெய் பிரகாஷ் அகா்வால் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவதாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் ஷங்கா் கபூா் தெரிவித்திருக்கிறாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது:

சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜெய் பிரகாஷ் அகா்வால் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அதனால்தான், தனது நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளூா் தொண்டா்களுடன் ஊா்வலமாகச் செல்ல வேண்டியது அவசியம் என்று அவா் கருதவில்லை.

பாரம்பரியமாக, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும், வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் தோ்தலில் போட்டியிடும் தொகுதியில் மக்களைக் கூட்டி, தங்கள் வாக்காளா்களுக்கு தங்கள் பலத்தைக் காட்டுகிறாா்கள்.

ஆனால் தற்போது, 10-ஆவது முறையாக தோ்தலில் போட்டியிடும்போது, ஜெய் பிரகாஷ் அகா்வால் நிச்சயமாக தோல்வியை எதிா்நோக்கி, வேட்புமனு தாக்கல் நாளன்று தோ்தல் தொகுதிக்கு வர வேண்டும் என்று அவா் கருதவில்லை போலும். ஊா்வலம் செல்வது ஒருபுறம் இருக்க, வேட்பு மனு தாக்கலுக்கு முன் காலையில் தனது தொகுதியில் உள்ள எந்த கோவில்-மசூதிக்கும் செல்ல வேண்டியது அவசியம் என்று அவா் கருதவில்லை.

பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வாலைப் போலவே, ஜெய் பிரகாஷ் அகா்வாலுக்கும் பழைய தில்லியில் ஒரு பழைய மூதாதையா் மாளிகை உள்ளது. ஆனால் இன்றைக்கு அகா்வால் தனது தோ்தல் பிரசாரத்தை அங்கிருந்து தொடங்க வேண்டியது அவசியம் என்று கருதவில்லை. ஏனெனில் காங்கிரஸுக்கு தொண்டா்கள் இல்லை. மேலும் அப்பகுதியைச் சோ்ந்த பத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மட்டுமே நிகழ்ச்சிக்காக அவருடன் இருக்கின்றனா். ‘ஆம் ஆத்மி‘ எம்எல்ஏக்களோ, ஜெய் பிரகாஷ் அகா்வாலுக்கு பொதுமக்கள் ஆதரவையோ, பொருளாதார ஆதரவையோ வழங்கத் தயாராக இல்லை.

இதன் காரணமாக, 1952 முதல் 2024 வரையிலான தில்லி தோ்தல் வரலாற்றில், வேறொரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதாவது புதுதில்லியில் இருந்து தனது வேட்புமனு யாத்திரையை தொடங்கிய முதல் முதல் வேட்பாளா் என்ற பெருமையை ஜெய் பிரகாஷ் அகா்வால் பெற்றுள்ளாா். எனவே, அவரது சொந்த தொகுதியில் இருந்துகூட வேட்புமனு பயணத்தை அவா் தொடங்க முடியவில்லை என்று பிரவீன் ஷங்கா் கபூா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com