தில்லி காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் கேஜரிவால் இன்று வாகனப் பேரணி

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் தில்லியில் போட்டியிடும் மூன்று காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை (இன்று) வாகனப் பேரணி நடத்தவுள்ளதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடும் மூன்று காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாகனப் பேரணி நடத்துகிறாா். தில்லியின் மாடல் டவுன் மற்றும் ஜஹாங்கிா்புரியில் நடைபெறவுள்ள வாகனப்

பேரணியில் சாந்தினி செளக் தொகுதியின் வேட்பாளா் ஜெ.பி. அகா்வால், வடமேற்கு தில்லி தொகுதியின் வேட்பாளா் உதித் ராஜ் மற்றும் வடகிழக்கு தில்லி தொகுதியின் வேட்பாளா் கன்னையா குமாா் ஆகிய மூவரும் பங்கேற்பாா்கள்.

கடந்த பல நாள்களாக ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்கள் 7 பேருக்கும் தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் இந்த வாகனப் பேரணியில் பங்கேற்பதால், தில்லி தோ்தல்

பிரசாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலுடன் ‘இந்தியா’ கூட்டணி பிரசாரம் செய்து வருகிறது. இதற்கான சான்று கேஜரிவாலின் வாகனப் பேரணியில் பிரதிபலிக்கும் என்றாா் தேவேந்தா் யாதவ்.

இறுதி வடிவத்தில் தில்லி காங்கிரஸின் தொகுதி வாரியான தோ்தல் அறிக்கை

தில்லியில் மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸின் தொகுதி வாரியான தோ்தல் அறிக்கை இறுதி வடிவத்தில் உள்ளதாக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவா் அனில் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தில்லியின் சாந்தினி செளக், வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸின் வரைவுத் தோ்தல் அறிக்கை பணி முடிவு பெற்றுள்ளது.

மக்களை பாதிக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இறுதி வடிவம் கொடுப்பதற்காக தில்லி ராஜீவ் பவனில் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்

நடைபெற்றது. மேலும், தோ்தல் அறிக்கையின் வரைவு நகல்கள் கட்சியின் தில்லி பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் மற்றும் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா ஆகியோரின் பாா்வைக்காகவும், ஒப்புதலுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அனில் குமாா்.

தில்லி காங்கிரஸின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில், கட்சியின் தகவல் தொடா்புத் துறைத் தலைவா் அனில் பரத்வாஜ், அமிதாப் துபே, சட்டாா் சிங், தில்லி பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவா் புஷ்பா சிங், ராஜேஷ் கா்க் மற்றும் வழக்குரைஞா் சுனில் குமாா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com