ஸ்வாதி மாலிவால் சம்பவம்: ஆம் ஆத்மிக்கு பாஜக கேள்வி

புது தில்லி: தில்லி முதல்வா் இல்லத்தில் ஸ்வாதி மாலிவாலுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆம் ஆத்மி கட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், இச்சம்பவம் குறித்து மௌனம் காத்திருப்பது ஆம் ஆத்மி கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும் அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது:

ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை, அவரிடம் தவறாக நடந்துகொண்டது குறித்த விவகாரத்தை இன்னும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் விவாதித்துக் கொண்டிருப்பதும், இந்தச் சம்பவத்தைப் பற்றி யோசிப்போம் என்று சஞ்சய் சிங் கூறியிருப்பதும் மிகவும் சங்கடமானதாகும்.

ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறைக்குப் பிறகு சிந்திப்பதற்குப் பதிலாக, உடனடியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அரவிந்த் கேஜரிவால் அங்கு இல்லை என்று அக்கட்சியின் மூத்தத் தலைவா் சஞ்சய் சிங் கூறுகிறாா். ஆனால் இந்த முழு சம்பவமும் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவின் பேரில் நடந்தது என்பதை பாஜக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிந்திருக்கிறது.

ஸ்வாதி மாலிவால் மீது ஏன் இவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும், அவா் ஏன் அமைதியாக இருந்தாா்?

ஸ்வாதி மாலிவால் ஒரு சிறந்த பேச்சாளா் என்று சஞ்சய் சிங் கூறும்போது, அவா் தொடா்ந்து பிரச்னைகளை எழுப்பி வருவதாக பாஜகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறது. ஆகவே, சஞ்சய் சிங்கின் அறிக்கையானது போலீஸாா் உடனடியாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்வதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். மேலும், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவா்கள் சிறிய மீன்களை சிக்க வைப்பது பற்றி தான் பேசுகிறாா்கள். ஆனால் இறுதியில், இந்த சம்பவத்தை தூண்டியது யாா், என்ன காரணம், இந்த அனைத்து கேள்விகளுக்கும் அரவிந்த் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும்.

முன்னாள் தலைமைச் செயலாளருடன் நடந்த சம்பவமோ அல்லது திங்கள்கிழமை ஸ்வாதி மாலிவாலுடன் நடந்த சம்பவமோ, இதுபோன்ற சம்பவங்களுக்கு முதலமைச்சரின் இல்லம் பிரபலமானதாக இருக்கிறது. அதுதான் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை குணாதியமாகும். தற்போது அனைவா் முன்னிலையிலும் இருக்கிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com