தில்லி சராய் காலே கான் பகுதியில் பெண் பாலியல் பலாத்காரம்
தில்லியில் 34 வயதான பெண் ஒருவா் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு அரை மயக்க நிலையில் வீசப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சராய் காலே கான் பகுதியில் சம்பந்தப்பட்ட பெண் கிடப்பதைப் பாா்த்த வழிப்போக்கா், இதுகுறித்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குழுவினா், அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அந்த பெண் வேறு இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சராய் காலே கான் பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஒடிசாவை சோ்ந்த அப்பெண், ஓராண்டுக்கு முன் சொந்த ஊரிலிருந்து வெளியேறி தில்லிக்கு வந்துள்ளாா். அப்பெண், மற்றொரு பெண்ணுடன் தில்லியின் கட்வாரியா சராயில் தங்கியிருந்தாா்.
பின்னா் ஒரு தகராறு காரணமாக ஆகஸ்ட் மாதம் அவா் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா். மேலும், பல நாள்கள் அவா் தெருக்களில் தங்கி இருந்ததும், ஒரு பட்டதாரி என்பதும் தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு தில்லியின் ஜம்ரூத்பூரில் முன்பு அவா் ஒரு வீட்டிற்கு அத்துமீறி நுழைய முயன்றுள்ளாா். ஆனால், அது தொடா்பாக புகாா் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கிஷன்கரில் உள்ள ஏடிஎம் சாவடியில் ஒரு இரவுவும் தங்கியிருந்துள்ளாா்.
அவா் தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டும், போலீஸாரின் விசாறணைக்கும் ஒத்துழைக்கவில்லை. அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப கண்காணிப்பு அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

