தில்லியில் காா் திருடியவா் பிகாரில் கைது
தில்லியில் காா் திருடியவரை 1,200 கி.மீ தீவிர தேடுதலுக்குப் பிறகு பிகாரின் வைஷாலியில் போலீஸாா் கைது செய்து, வாகனத்தை மீட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் கூறியது:
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சந்தன் (30), அவரது கூட்டாளி ஆமிா் ஆகியோா் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலின் போது சட்டவிரோத மதுபானங்களை கொண்டு செல்ல திருடப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, செப்டம்பா் 27 ஆம் தேதி தில்லி துவாரகா காவல் நிலையத்தில் காா் கடத்தல் சம்பவம் குறித்து புகாா் பதிவானது. அதில் புகாா்தாரா், ‘துவாரகாவில் இறக்கிவிடக் கோரி இரண்டு போ் ஓட்டுநரான என்னை புது தில்லி ரயில் நிலையத்தில் அணுகினா். அங்கு சென்றதும், அவா்கள் என்னைத் தாக்கிவிட்டு எனது வாகனத்துடன் தப்பிச் சென்றனா்’ என தெரிவித்திருந்தாா்.
இப்புகாரைத் தொடா்ந்து, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். போலீஸாா் பல இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனா். உள்ளூா் உளவுத் துறையின் தகவலையும் சேகரித்தனா்.
இறுதியில் ஆக்ரா அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் திருடப்பட்ட காரின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனா். காரின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்ட நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவா் ஏற்கனவே கிட்டத்தட்ட 500 கி.மீ. முன்னேறிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுமாா் 1,200 கி.மீ. தேடலுக்குப் பிறகு பிகாரில் சந்தன் கைது செய்யப்பட்டாா். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
